ஹாங்காங்: ஹாங்காங்கில் போராட்டங்களை மேற்கொண்டு வரும் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று அவசர நேர பயணிகள் ரயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹாங்காங் முழுவதும் நேற்று காலை நேரம் ஏற்பட்ட பரவலான இந்த இடையூறு காரணமாக சுமார் அரைமணி நேரத்திற்கும் மேல் முக்கிய பயணிகள் ரயில்கள் தடைபட்டன.
நகரம் முழுவதும் ரயில்கள் செல்வதைப் போராட்டக்காரர்கள் தடுத்துள்ளனர். சிலர் ரயில் பெட்டிகளின் கதவுகளைத் திறக்கவிடாமல் தடுத்தனர். மற்றவர்கள் அவசர அலாரங்களை ஒலிக்கவிட்டதால் ஹாங்காங் முழுவதிலும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
ரயில் பயணிகளில் பெரும்பாலானவர்கள் சுரங்கப்பாதை தளங்களில் சிக்கிக்கொண்டதுடன், பெரும்பாலான சேவைகள் காலை நேரத்தில் மோசமாக தாமதமடைந்த பின், இயல்பு நிலைக்குத் திரும்பியது.
சில குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களைச் சீனாவிற்கு நாடு கடத்த வகை செய்யும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.
இதையடுத்து நேற்று மாலை, போராட்டக்காரர்களில் சிலர் குவாய் சுங் போலிஸ் நிலையத்திற்கு வெளியே கூடி, கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை விடுவிக்குமாறு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதற்கிடையே, உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 4.30 மணியளவில் இளம் போராட்டக்காரர்கள் அடங்கிய 12 பேர் குழு ஹாங்காங் விமான நிலையத்தில் கூடினர்.
தங்களது செய்தியை வெளிநாட்டினருக்குச் கொண்டு செல்லும் வகையில் அவர்கள் அங்கு கூடினர்.
அண்மையில் ஹாங்காங் போலிஸ் நடத்திய தடியடியைக் கூறும் வகையில் அவர்கள், தங்களது முதுகில் எதிர்ப்பு முழக்கங்கள், படக்குறிப்பு ஆகியவற்றை ஒட்டிக் கொண்டு சுற்றினர்.
இதற்கிடையே, அண்மைய மோதல்களின் போது கைது செய்யப்பட்ட 44 பேர் மீது கலவரத்தைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப் போவதாக போலிசார் கூறியுள்ளதாக ஏஎஃப்பி செய்தி கூறுகி
றது.
இன்று நீதிமன்றத்தில் இவர்கள் முன்னிலைப்படுத்தப்படலாம் என்று கூறப்படும் நிலையில், இவர்கள் 10 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்நோக்குகிறார்கள்.

