வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் கனடாவில் 106 மில்லியன் மக்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக 'கேபிடல் ஒன்' என்னும் நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, இணைய ஊடுருவல் செய்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நிதிச் சேவை நிறுவனமான கேபிடல் ஒன், தன் வாடிக்கையாளர்களுக்கு கடன் அட்டை, கடன், வங்கி மற்றும் சேமிப்பு கணக்குகள் தொடர்பான சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த ஊடுருவலின் போது கடன் அட்டை வாங்குவதற்கு பதிவு செய்த நபர்களின் பெயர்கள், முகவரிகள், கைபேசி எண்கள் போன்ற தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டதாக கேபிடல் ஒன் தெரிவித்து உள்ளது.
ஆனால் ஊடுருவல்காரரால் கடன் அட்டை எண்களைத் திருட முடியவில்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தகவல் திருட்டால் அமெரிக்காவில் 100 மில்லியன் பேரும் கனடாவில் 6 மில்லியன் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மார்ச் 12க்கும் ஜூலை 17ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தத் தரவுத் திருட்டு நடைபெற்றிருக்கலாம் என்று கூறப்படுகி
றது.
நிறுவனத்தின் உள்கட்டமைப்பின் பாதுகாப்புத்தன்மையில் இருந்த குறைபாட்டை ஊடுருவல் செய்தவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர் என கேபிடல் ஒன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தரவுத் திருட்டு தொடர்பாக அமேசான். காம் நிறுவனத்தின் முன்னாள் மென்பொறியாளரான சியாட்டலைச் சேர்ந்த பேஜ் தாம்சன் என்னும் 33 வயது பெண்ணைக் கைது செய்துள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
பேஜ் தாம்சன் என்னும் அந்த 33 வயது பெண், கணிப்பொறி மோசடி, தாக்குதல் குற்றத்தின் பேரில் திங்களன்று கைது செய்யப்பட்டார்.

