ஆய்வு: சிங்கப்பூர் இளையர்களைவிட ஹாங்காங் இளையர்களுக்கு மகிழ்ச்சி குறைவு

ஆய்வு: சிங்கப்பூர் இளையர்களைவிட ஹாங்காங் இளையர்களுக்கு மகிழ்ச்சி குறைவு

2 mins read
9871d222-c03a-4f39-996d-493bee245f08
-

ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கும் முன்னரே அந்நகர இளையர்கள் சிங்கப்பூர் இளையர்களின் அளவுக்கு மகிழ்ச்சியாக இருந்ததில்லை என்று ஹாங்காங்கின் சிட்டி பல்கலைக்கழகத்தின் கருத்தாய்வு குறிப்பிடுகிறது. இந்தக் கருத்தாய்வில் பங்கேற்ற நாற்பது வயதுக்கும் குறைவான 2,304 பேரில் கிட்டத்தட்ட பாதி பேர் ஹாங்காங்கையும் மீதி பேர் சிங்கப்பூரையும் சேர்ந்தவர்கள். ஆசியாவின் நிதித்துறை மையங்களாகத் திகழும் இவ்விரு நகரங்களின் வாழ்க்கைத்தரத்தை அந்த ஆய்வு ஒப்பிடுகிறது.

ஒன்று முதல் பத்து வரையிலான அளவுகோலில் தங்கள் மகிழ்ச்சித் தரத்தை ஹாங்காங் வட்டாரவாசிகள் சராசரியாக 6.80 ஆகவும் சிங்கப்பூரர்கள் 7.48 ஆகவும் மதிப்பிட்டுள்ளனர். அரசியல், கேளிக்கை, பொருளியல் சூழல் உள்ளிட்ட 11 தலைப்புகளை ஒட்டிய அந்தக் கருத்துக்கணிப்பில் ஹாங்காங் மக்கள் தங்களது வீடமைப்பு குறித்து ஆக அதிக அதிருப்தியில் உள்ளனர்.

ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியதற்குப் பின் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டால் ஹாங்காங் மக்களின் மகிழ்ச்சித்தரம் இன்னும் குறைந்த நிலையில் பதிவாகி இருக்கும் என்று கருத்தாய்வின் தலைமை ஆய்வாளர் பேராசிரியர் டென்னிஸ் வோங் தெரிவித்தார்.

"இந்த ஆர்ப்பாட்டங்களால் இளையர்களில் சிலர் தங்களுக்கு ஆதரவு இல்லை என எண்ணித் தளர்ந்து மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்," என்று கூறிய பேராசிரியர் வோங், அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுமாறு அந்நகரத்தின் அரசாங்கத்தை ஊக்குவித்துள்ளார்.

"எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், இத்தகைய இளையர்களின் எண்ணிக்கை மீள முடியாத அளவுக்குப் பெருகிவிடும்," என்று அவர் எச்சரித்தார்.

இளையர்களுக்கு இடையிலான இந்தச் சஞ்சலம் பெருகினால் பின்னர் சிங்கப்பூர் ஹாங்காங்கை பின்னுக்குத் தள்ளிவிடும் என்று பேராசிரியர் வோங் கூறினார். " பல வழிகளில் சிங்கப்பூர் ஹாங்காங்கை முந்திக்கொண்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் நாம் அனைத்து வழிகளிலும் தோற்றுவிடுவோம்," என்று அவர் சொன்னார்.