மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது தமக்கு அடுத்து அந்தப் பதவிக்கு அன்வார் வருவார் என மீண்டும் உறுதி அளித்திருக்கிறார். மலேசிய பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலியைத் தொடர்புபடுத்தும் ஓரின பாலியல் காணொளிகள் சில, கடந்த மாதம் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து ஆளும் கட்சியினரின் உட்பிரிவுகளுக்கு இடையே நிலவி வருகிற அக்குப்போருக்கு மத்தியில் டாக்டர் மகாதீர் துருக்கிய தொலைக்காட்சி ஒளிவழிக்கு அளித்த பேட்டியின்போது தமது நிலைப்பாட்டை மறு உறுதி செய்துகொண்டார். அந்தக் காணொளி குறித்து திரு அஸ்மினின் ஆதரவாளர்களுக்கும் திரு அன்வாரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
71 வயது திரு அன்வாருக்குப் பதிலாக 54 வயது திரு அஸ்மினே பிரதமராக வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோரி வருகின்றனர். ஒருவேளை டாக்டர் மகாதீர் திரு அன்வாருக்குப் பதிலாக திரு அஸ்மினையே பிரதமராக நியமிக்கக்கூடும் என்ற ஊகங்கள் எழுந்துள்ள நேரத்தில் தமது வாக்குறுதியை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என்று 94 வயது டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

