ஹாங்காங் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஹாங்காங் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

2 mins read

ஹாங்காங்: ஹாங்காங்கில் அமைதியின்மைக்கு வழிவகுத்து கலவரம் செய்ததாக 44 பேர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அங்குப் பதற்றம் அதிகரித்தது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது குற்றஞ்சாட்டப்படப் போவதாக நேற்று முன்தினம் இரவு அறிவிப்பு வெளியானபோதே போலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே இன்னோர் மோதல் உண்டா

னது.

நேற்று அதிகாலை 3 மணியளவில் வாணவேடிக்கைகள் கொளுத்தப்பட்டதில் ஆறு பேர் காயமடைந்தனர். வாணவேடிக்கை கொளுத்தப்பட்டதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.

கடும் காற்று, மழையையும் பொருட்படுத்தாமல் நேற்று காலையும் நீதிமன்றத்திற்கு வெளியே கூடிய பலர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.

அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் அல்ல, உரிமை கோருபவர்களை விடுவியுங்கள் போன்ற முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

நீதிமன்றத்தில் அமைதியாக நின்றிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னால், அவர்கள் மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 28 ஆடவர்களும் 16 பெண்களும் அடங்குவர். இவர்களில் 16 வயது பெண் ஆக இளையவர் என்பது கவனிக்கத்தக்கது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் சாலை மறிப்பு, வேலி உடைப்பு, அதிகாரிகள் மீது கற்கள், கம்பிகளை எறிந்தது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டார்கள் என்று போலிஸ் தரப்பு அறிக்கை கூறுகிறது.

ஹாங்காங்கிலேயே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒன்பது பேருக்கு 1,000 ஹாங்காங் டாலர்களுக்குப் பிணை வழங்கப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் 10 ஆண்டு வரை சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்.

சில வகை குற்றங்களில் ஈடுபடுபவர்களை சீனாவிடம் ஒப்படைக்க வகை செய்யும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் கிட்டத்தட்ட ஏழு வாரங்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அப்போது போலிசார் தடியடி நடத்தியும், மிளகு பொடி தூவியும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

அவ்வேளையில் போலிசுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதாக போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.