சுற்றுப்பயணிகளுக்கு இலங்கை இலவச விசா

சுற்றுப்பயணிகளுக்கு இலங்கை இலவச விசா

1 mins read

கொழும்பு: இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்தது.

250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட இத்தாக்குதலைத் தொடர்ந்து பல நாடுகள் இலங்கைக்குச் செல்வது தொடர்பில் பாதுகாப்பு ஆலோசனைகள் வழங்கின. இதனால், இலங்கைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, அவற்றைச் சரிசெய்யும் வகையிலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையிலும் இலவச விசா திட்டத்தை இலங்கை அரசு அறிவித்துள்ளது.

சீனா, இந்தியா உள்ளிட்ட 48 நாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை விமான நிலையத்திற்குச் சென்ற பிறகு இலவச விசா பெற்றுக் கொள்ளலாம் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.

20 முதல் 40 அமெரிக்க டாலர்கள் வரையிலான விசா கட்டண ரத்து அடுத்த ஆறு மாதங்களுக்கு நடப்பில் இருக்கும் என்றும் இதனால் ஏற்படும் வருவாய் இழப்பு, சுற்றுலாப் பயணிகளின் வருகை ஆகியவற்றை ஆராய்ந்த பின்னர் இச்சலுகையைத் தொடர்வது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சு கூறியுள்ளது.