காபூல்: ஆப்கானிஸ்தான் நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது சாலையோரத்தில் இருந்த கண்ணிவெடி வெடித்ததில் பெண்கள், குழந்தைகள் உள்பட 34 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 15க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலிசார் கூறினர்.
இதுகுறித்து அதிபர் அஷ்ரப் கனியின் பேச்சாளர், "இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவி மக்கள். தீவிரவாதிகள் வைத்திருந்த கண்ணிவெடியில் பேருந்து மோதியதால், இந்தச் சோக சம்பவம் நடந்தது," என்றார் அவர்.
இதற்கு தலிபான் உடனடியாக பொறுப்பேற்கவில்லை என்றாலும், அச்சாலையில் செல்லும் அரசு வாகனங்கள், அரசாங்க அதிகாரிகளைக் குறிவைத்து அவர்கள் கண்ணி வெடி வைப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் எல்லை மாவட்டமான ஸ்பின் போல்டக்கின் வீதியோர சந்தைப் பகுதியை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் போலிசார் கூறுகின்றனர்.
இதற்கிடையே இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் ஆப்கானிஸ்தானில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களைவிட ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்ட மக்கள் அதிகம் என்றும் ஐநா புள்ளிவிவரத் தகவல் தெரிவிக்கிறது.
இந்த காலகட்டத்தில் தீவிரவாதிகளால் 631 பேர் கொல்லப்பட்டனர் என்றும், அதேவேளையில் 717 பேர் ஆப்கான், அமெரிக்க படைகளின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர் என்றும் அந்த தகவல் மேலும் தெரிவிக்கிறது.
ஐநாவின் இந்த அறிக்கை வெளியான நிலையில் 34 பேரை பலிவாங்கிய தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

