கோலாலம்பூர்: வெளிநாட்டு ஊழியர்களை அதிகம் சார்ந்திருப்பதைக் குறைக்கும் வகையில், தொழிலாளர் சட்டங்களை திருத்தவுள்ளதாக மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது கூறியுள்ளார்.
மலேசியத் தொழிலாளர் சக்தியில் 46% விழுக்காட்டினர் வெளிநாட்டுத் தொழிலாளர்களாக இருப்பதால் அங்கு அதிருப்தி நிலவும் நிலையில், நேற்று அவர் இவ்வாறு கூறினார்.
தென்கிழக்காசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான மலேசியா இவ்வாண்டின் முதல் காலாண்டில், 15.5 மில்லியன் தொழிலாளர்களைக் கொண்டிருந்தது.
அவர்களில் ஏழு மில்லியனுக்கும் அதிகமானோர், பங்ளாதேஷ் போன்ற நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் ஆவர்.
வெளிநாட்டு ஊழியர்களில் பெரும்பாலானோர் கட்டுமான, உணவு விடுதித் துறைகளில் வேலை செய்கிறார்கள்.
தொழிலாளர் சக்தி என்பது 16 முதல் 64 வயதுக்குட்பட்ட வேலையில் உள்ள அல்லது வேலையற்ற நபர்களைக் குறிக்கிறது.
அதிக திறன்மிக்க வேலைகள், சம்பள உயர்வு, தொழிலாளர் சந்தை நிலவரம், இடம்பெயர்ந்த தொழிலாளர் நிர்வாகம் ஆகியவற்றை மேம்படுத்துதல் ஆகியவை திருத்தத்தின் முக்கிய அம்சங்களாகும் என்று அனைத்துலக வர்த்தக கழகக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மகாதீர் கூறினார்.
"எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையான மனிதவள மூலதனத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், வேலையின்மைக்குப் பங்களிக்கும் பொருந்தாத வேலைகளைக் கண்டறிவது, மெதுவான ஊதிய உயர்வு, வெளிநாட்டு ஊழியர்களை அதிகம் சார்ந்திருப்பது ஆகியவற்றைச் சரிசெய்யும் வகையிலும் இந்தத் திருத்தம் முக்கியமானதாகிறது என்று அவர் சொன்னார்.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் 55.7 விழுக்காடாக உள்ள, பெண் தொழிலாளர் பங்களிப்பை 59 விழுக்காடாக உயர்த்தவும் அரசாங்கம் பாடுபடும் என்றும் அவர் சொன்னார்.

