வெடிகுண்டு புரளியும் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டும்: பதற்றத்தில் கோலாலம்பூர்

2 mins read

கோலாலம்பூர்: கோலாலம்பூர் அருகே உள்ள வீடு ஒன்றிலிருந்து வெடிபொருள் ஒன்றை போலிசார் நேற்று முன்தினம் இரவு மீட்டனர். அந்த வெடிபொருள் முழுமையாகத் தயாரிக்கப்படாதது என்று பின்னர் தெரிய வந்தது.

வெடிகுண்டு ஆய்வுக்குழு விரைந்து சென்று சோதித்ததில் அந்த விவரம் தெரியவந்ததாக நகர போலிஸ் தலைவர் மஸ்லான் லாஸிம் கூறினார்.

புக்கிட் தாமான்சாராவில் உள்ள வீட்டில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருள் குறித்த விசாரணை தொடர்கிறது என்று அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மாலை 5 மணி அளவில் பொதுமக்களில் ஒருவர் அந்த வெடிபொருளைக் கண்டபோதிலும் போலிசுக்கு ஐந்து மணி நேரம் தாமதமாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக 'த நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' குறிப்பிட்டது.

அதேநேரம் இரு இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்ற மிரட்டல் ஒன்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

கோலாலம்பூர் சென்ட்ரல் போக்குவரத்து மையத்திலும் ரஷ்ய தூதரகத்திலும் குண்டு வெடிக்கும் என்று பரப்பப்பட்ட தகவலால் பதற்றம் நிலவியது.

வியாழக்கிழமை மாலை சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்ட அந்த தகவலில், "கைப்பெட்டி ஒன்றில் அடைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்று கோலாலம்பூர் சென்ட்ரலில் வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் அது வெடிக்கும்," என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

சிறிது நேரத்தில் மீண்டும் ஒரு தகவல் பரவியது. கோலாலம்பூர் சென்ட்ரலில் குண்டு வெடித்ததும் ரஷ்ய தூதரகத்தினுள் வைக்கப்பட்டு உள்ள மற்றொரு குண்டு வெடிக்கும் என அத்தகவலில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

டுவிட்டரில் வெளியான அந்த இரு தகவலும் நேற்று பிற்பகலில் அகற்றப்பட்டன.

இருந்தபோதிலும் டுவிட்டர் தகவல்களில் குறிப்பிடப்பட்ட இரு இடங்களிலும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியதாகவும் சந்தேகத்துக்குரிய பொருள் எதுவும் சிக்கவில்லை என்றும் திரு மஸ்லான் கூறினார்.

இந்த மிரட்டல் போலி என்று தெரிய வந்திருப்பதாகவும் தகவலைப் பரப்பியவரின் அடையாளத்தைக் கண்டறிய மலேசிய தொலைத்தொடர்பு, பல்லூடக ஆணையத்துடன் இணைந்து போலிசார் விசாரணை மேற்கொண்டிருப்பதாகவும் திரு மஸ்லான் சொன்னார்.

இந்த வெடிகுண்டு புரளிக்கும் புக்கிட் தாமான்சாராவில் கண்டெடுக்கப்பட்ட வெடிக்காத பொருளுக்கும் தொடர்பு உண்டா என்று தெளிவாகத் தெரியவில்லை என ஊடகங்கள் கூறியுள்ளன.