ஜார்ஜ் டவுன்: கட்சிக்கும் அமைச்சுப் பொறுப்புகளுக்கும் தாம் எப்போதுமே சமமான அளவில் முக்கியத்துவம் அளிப்பதாக மலேசியப் பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி (படம்) தெரிவித்து உள்ளார்.
"அரசியல் பணியில் அமைச்சர்கள் களைத்துப்போயிருப்பதால் பொருளியல் விவகாரங்களுக்கு நான் அதிகளவில் முக்கியத்துவம் தருவேன்.
"எனவேதான் பிரதமர் மகாதீர் முகம்மது உடனான எனது சந்திப்புகள் பெரும்பாலும் கட்சிப் பிரச்சினைகளுக்குப் பதிலாக பொருளியல் விவகாரங்கள் தொடர்புடையவையாக இருக்கும்," என்றார் பிகேஆர் கட்சித் துணைத் தலைவரான திரு அஸ்மின்.
அதே வேளையில், கட்சி விவகாரங்களுக்கும் அதே அளவு முக்கியத்துவத்தைத் தாம் அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், பினாங்கில் நேற்றிரவு கட்சித் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தியதைச் சுட்டினார்.
இதற்கிடையே, டாக்டர் மகாதீரின் பதவிக்காலம் முடியும் வரையிலும் அவர் பிரதமராக பணியாற்ற வேண்டும் என்று ஆதரிப்பதன் மூலமாக தாம் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை என்பதைத் திரு அஸ்மின் தெளிவுபடுத்தினார்.
டாக்டர் மகாதீருக்கு அவர் அளித்த ஆதரவு பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமை ஆதரிக்கவில்லை என்பதற்கு அறிகுறியா எனக் கேட்டபோது, "தவறாக விளங்கிக்கொள்ள வேண்டாம்," என்று திரு அஸ்மின் கூறினார்.
நாட்டில் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவே இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியின் அழைப்பை தாம் ஆதரிப்பதாக அவர் சொன்னார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு புத்ராஜெயாவில் டாக்டர் மகாதீருக்கும் மலேசியாவின் முக்கிய எதிர்க்கட்சிக்கும் இடையிலான சந்திப்பைத் திரு அஸ்மின் வழிநடத்தியது குறிப்பிடத்தக்கது.

