அமெரிக்காவின் புதிய 10 விழுக்காடு வரி வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டு வர உதவாது என்று சீனா குறைகூறியுள்ளது.
அடுத்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து மீதமுள்ள 300 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள சீன இறக்குமதிகளுக்கு 10 விழுக்காடு வரி விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார்.
அமெரிக்க-சீன வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் காணாததை அடுத்து, அதிபர் டிரம்ப் இந்த முடிவை எடுத்தார். சீன அதிபர் ஸி ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகும் நிலைமையில் மாற்றம் இல்லாவிடில் வரி விகிதத்தை 25 விழுக்காட்டுக்கு உயர்த்தக்கூடும் என்று அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பு குறித்து சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ அதிருப்தி தெரிவித்துள்ளார்.
"வரிகளை விதிப்பதன் மூலம் பொருளியல், வர்த்தக விரிசல்
களுக்குத் தீர்வு காண முடியாது. அது ஆக்கபூர்வமான அணுகுமுறை ஆகாது," என்று பேங்காக்கில் நடைபெறும் ஆசியான் மாநாட்டில் பங்கேற்கும் திரு வாங், சீன ஊடகத்திடம் தெரிவித்தார்.
கைபேசிகள், மடிக்கணினிகள், விளையாட்டுப் பொருட்கள், காலணிகள் போன்ற பொருட்களின் வர்த்தகத்தை விதிக்கப்பட இருக்கும் வரி பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
"இந்தப் பிரச்சினை குறித்து அதிபர் ஸி தீர்வு காண விரும்புகிறார் என்று நான் நம்புகிறேன். ஆனால் அதற்கான செயல்பாடுகளில் இறங்க அவர் தேவையான வேகம் காட்டவில்லை," என்று
அதிபர் டிரம்ப் கூறினார்.
அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள புதிய வரி நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று அமெரிக்க- சீன வர்த்தக மன்றம் கவலை தெரிவித்துள்ளது.
"அதிபர் டிரம்ப்பின் நடவடிக்கை சீனாவைப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகச் செய்திடும் என்று அஞ்சுகிறோம். இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் சாத்தியத்தை இது குறைத்துள்ளது.
"முதல் சுற்று பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்ததாக நாங்கள் நம்புகிறோம். இப்படி இருக்கையில் கூடுதல் வரிகள் அறிவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றத்தைத் தருகிறது," என்று மன்றத்தின் தலைவர் கிரேக் எலன் தெரிவித்தார்.
வரி விதிப்பதைத் தவிர்த்துவிட்டு நிபந்தனைகள் ஏதும் விதிக்காமல் பேச்சுவார்த்தை நடத்தும்படி அமெரிக்காவையும் சீனாவையும் திரு எலன் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே, அதிபர் டிரம்ப் புதிய வரி குறித்து அறிவித்ததை அடுத்து அமெரிக்க நிதிச் சந்தைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கச்சா எண்ணெய் விலை 7% சரிந்தது.

