மலேசியாவின் அடுத்த பிரதமராக அன்வார் இப்ராகிம் வருவதை தாம் ஆதரிக்கவில்லை என்ற கருத்தை பிகேஆர் கட்சியின் துணைத் தலைவரும் பொருளியல் விவகார அமைச்சருமான அஸ்மின் அலி (படம்) மறுத்துள்ளார். அன்வாரை ஆதரிக்காமல் ஐந்தாண்டு முழுமைக்கும் மகாதீர் முகம்மதுவே பிரதமராக நீடிக்க ஆதரவு வழங்குவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது அவர் காட்டமாகப் பதில் அளித்தார்.
"நீங்களே எதையாவது கற்பனை செய்துகொள்ளாதீர்கள். நான் அன்வாரைச் சந்தித்தேன். கட்சியில் சில பிரச்சினைகள் இருப்பதை ஒப்புக்கொள்கிறேன். இருப்பினும் கட்சியின் தலைவர்களும் உறுப்பினர்களும் அவற்றுக்குத் தீர்வுகாண்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார் அஸ்மின். ஆனாலும் அன்வாருடனான சந்திப்பு எப்போது நடைபெற்றது என்று அவர் குறிப்பிடவில்லை.
12வது மலேசியா திட்டம் தொடர்பில் பினாங்கு மாநில ஆட்சியாளர்களுடன் கூட்டம் நடத்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். டாக்டர் மகாதீர் தமது பதவிக்காலம் முழுமைக்கும் தொடருமாறு வலியுறுத்திய எதிர்த்தரப்புத் தலைவர்கள் அடங்கிய குழுவை தாம் வழிநடத்திச் சென்றதாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.
"பிரதமரை பலமுறை சந்தித்திருக்கிறேன். எதிர்த்தரப்பினரை அழைத்துச் சென்று சந்தித்ததாக நீங்கள் கூறும் சந்திப்பு என்று எதை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை," என்றும் அஸ்மின் கூறினார்.
அண்மையில் நடைபெற்ற பிகேஆர் கட்சிக் கூட்டங்களில் அஸ்மின் பங்கேற்பது இல்லை என அக்கட்சியின் தலைவர்கள் குறைகூறியதைத் தொடர்ந்து அன்வாரை அவர் ஆதரிக்கவில்லை என்ற சந்தேகம் எழுந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை எதிர்த்தரப்பினர் பிரதமர் மகாதீரைச் சந்தித்த பின்னர் இந்த சந்தேகம் வலுப்பெற்றது.

