ரஷ்யாவில் எதிர்க்கட்சித் தலைவர் கைது

ரஷ்யாவில் எதிர்க்கட்சித் தலைவர் கைது

2 mins read
c105a952-7047-4203-89e5-701f604fafb2
எதிர்க்கட்சித் தலைவர் லுய்போவ் சோபோலை இழுத்துச் சென்ற போலிசார். படம்: ராய்ட்டர்ஸ் -

மாஸ்கோ: அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாக ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் லுய்போவ் சோபோல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

நியாயமான முறையில் தேர்தலை நடத்தக் கோரி எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் நடந்த போராட்டத்தின் போது சுமார் 1,400 பேர் கைது செய்யப்பட்டதோடு, அது குறித்து குற்ற விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

போலிசாரின் ஒடுக்குமுறையை மீறி, போராட்டக்காரர்கள் நேற்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்தலில், எதிர்க்கட்சியின் முக்கிய வேட்பாளர்களின் மனுவில் குளறுபடிகள் இருப்பதாகக் கூறி நிராகரிக்கப்பட்டதையடுத்து, ரஷ்யாவில் போராட்டம் வெடித்தது.

அவர்கள் கையெழுத்து மோசடி செய்ததால், நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை நடந்த நியாயமான தேர்தலுக்கான பேரணி, போராட்டத்தில் சுமார் 22,000 பேர் பங்கேற்றனர். அப்போது போராட்டக்காரர்களுக்கு எதிராக போலிசார் அடக்குமுறையைக் கையாண்டனர்.

அண்மைய காலத்தில் ரஷ்யாவின் மிக மோசமான அரசியல் மோதல் இது.

முன்னதாக, நியாயமான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, நேற்று நடைபெற்ற பேரணியில் கலந்துகொள்ளப்போவதாக சுமார் 6,000 பேர் தங்களது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருந்தனர்.

இதற்கிடையே, போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற எதிர்க்கட்சித் தலைவர் லுய்போவ் சோபோல் காரில் இருந்து இறங்கிய உடன், போலிசார் அவரை இழுத்துச் சென்று கறுப்பு நிற வண்டியில் ஏற்றினர். மேலும் 33 பேர் நேற்று கைது செய்யப்பட்டதாகக் கூறப்

படுகிறது.

மனு நிராகரிப்பட்டவர்களில் ஒருவரான சோபோல், கடந்த 21 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

மேலும் அனுமதி பெறாத இப்போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.