பேங்காக் குண்டுவெடிப்பு: மூன்று பேர் கைது

பேங்காக் குண்டுவெடிப்பு: மூன்று பேர் கைது

1 mins read

பேங்காக்: பேங்காக்கில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தொடர் குண்டுவெடிப்பையடுத்து, மூன்று பதின்ம வயதினரை போலிசார் கைது செய்தனர்.

உள்ளூர்வாசிகள் அளித்த தகவலின்படி போலிசார் இந்த மூவரையும் கைது செய்தனர்.

குண்டுவெடிப்பு சம்பவம் நடை பெறுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு, சில மாணவர்கள் அங்குப் பொருட்களை விட்டுச் சென்றதைப் பார்த்ததாக அவர்கள் போலிசிடம் கூறினர்.

பேங்காக்கில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கக்கூடிய நாட்டு வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில், சுன் லூங் மாவட்டத்தின் ராமா 9 ரோட்டில் நிகழ்ந்த குண்டு வெடிப்பும் ஒன்று.

இதில் சாலை சுத்தம் செய்யும் மூவர் காயமடைந்தனர்.

பேங்காக்கின் அரசாங்க கட்டடத்தில் மூன்றும் மத்திய பேங்காக்கில் ரயில் நிலையத்திற்கு அருகே இரு குண்டுவெடிப்புகளும் நேர்ந்தன. இந்நிலையில், வெடிக்காத வெடிகுண்டு ஒன்றையும் ஏழாவதாக அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இக்குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில், இச்சம்பவங்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதா என்பதும் தெரியவில்லை.

முன்னதாக, வியாழக்கிழமை இரண்டு போலி வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்த போலிசார், அது தொடர்பாக இருவரைக் கைது செய்தனர்.

இதற்கிடையே, பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளின் நம்பிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் அந்நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சர் அங்குள்ள யோவரத் பகுதிக்குச் சென்றார்.

அப்போது சுற்றுலாப் பயணிகளிடம் பேசிய அவர், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக உறுதியளித்தார்.