மூன்றாவது எண்ணெய்க் கப்பலை சிறைபிடித்தது ஈரான்

மூன்றாவது எண்ணெய்க் கப்பலை சிறைபிடித்தது ஈரான்

1 mins read

டெஹ்ரான்: எண்ணெய் கடத்திச் சென்ற வெளிநாட்டுக் கப்பல் ஒன்றைப் பறிமுதல் செய்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த செய்தியினை ஈரான் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

700,000 லிட்டர் எண்ணெய்யை அரேபிய நாடுகளுக்கு அக்கப்பல் கடத்திச் சென்றதால் கைப்பற்றப்பட்டதாக அச்செய்தி தெரிவிக்கி

றது.

அத்துடன், குறித்த கப்பலில் பயணித்த மாலுமிகள் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வளைகுடா பகுதியில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தவும் சட்டவிரோத வர்த்தகத்தைக் கண்டறியவும் கடல் பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அக்கப்பல் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

நீதித்துறையில் உரிய அனுமதி பெற்றே சோதனை மேற்கொண்டதாகவும், அதன் அடிப்படையிலேயே கப்பலைப் பறிமுதல் செய்துள்ளதாகவும் ஈரான் குறிப்பிட்டுள்ளது.

கப்பல் புஷேருக்கு மாற்றப்பட்டு அதில் கடத்தப்பட்ட எண்ணெய் நீதித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப் படுகிறது.

ஈரான் அரசாங்கத்தினால் கடந்த ஒரு மாதத்தில் கைப்பற்றப்பட்ட மூன்றாவது கப்பலாகும் இது.

கடந்த 18ஆம் தேதி ஜூலை பானாமா கொடியுடன் வந்த எம்டி ரியா என்ற எண்ணெய்க் கப்பலை கைப்பற்றியது.

அதற்கு அடுத்த நாள், இங்கிலாந்தின் ஸ்டெனா இம்பெரோ கப்பலை ஈரான் சிறைபிடித்தது.

அக்கப்பல் ஈரான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் ஈரான் கடற்படையினரின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் தவறான வழியில் சென்றதால் சிறைப் பிடித்ததாகவும் ஈரான் தெரிவித்திருந்தது.

அதற்கு முன்னர் ஈரானின் கிப்ரால்டர் எண்ணெய்க் கப்பலை இங்கிலாந்து சிறை பிடித்ததற்கான பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாகவும் இது பார்க்கப்பட்டது.