மணிலா: பிலிப்பீன்சில் மூன்று படகுகள் கவிழ்ந்த விபத்தில், குறைந்தது 30 பேர் பலியாகினர். மேலும் பலரைக் காணாத நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கடும் காற்று மற்றும் அலைகளால் தாக்கப்பட்டதால் மத்திய பிலிப்பீன்சின் குய்மாரஸ் மற்றும் இல்லியோ மாகாணங்களில் இரண்டு படகுகள் கவிழ்ந்தன.
62 பேர் காப்பாற்றப்பட்ட நிலையில், 30 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
இல்லாயோ ஜலசந்தியில் கவிழ்ந்த, மற்றோர் படகில் பயணிகள் யாரும் இல்லை என்றும் படகு ஊழியர்கள் ஐந்து பேரும் உயிர் பிழைத்ததாக கடலோர காவல்படை செய்தித் தொடர்பாளர் அர்மண்ட் பலிலோ கூறினார்.
ஏற்கெனவே கடும் மழை, புயல் வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் பயணம் செய்ததாக அவர் கூறினார்.
மோசமான வானிலையில் நண்பகலில் இரண்டு படகுகள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் கவிழ்ந்த பின்னர் மூன்றாவது படகு சுமார் மூன்று மணி நேரம் பயணம் செய்ய ஏன் அனுமதிக்கப்பட்டது என்று அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மணிலாவில் கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் பலத்த மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டதால் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன.

