ஹாங்காங்கின் ஜனநாயக ஆர்ப்பாட்டங்கள் அதிகரிக்கும் நிலையில் மத்திய அரசாங்க அலுவலகங்களுக்கு அருகே பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஹாங்காங்கின் ஏழு பகுதிகளில் நடைபெற்றுவரும் இந்த ஆர்ப்பாட்டம் இன்னும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை ரயில் சேவைகள் சில தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டன. ரயில் கதவுகள் அடைப்பதைத் தடுக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் குடைகளைப் பயன்படுத்தி சேவைத் தாமதங்களை ஏற்படுத்தினர். மேலும் சிலர் ரயில் தடங்களில் எஃகுக் கம்பிகள், தள்ளுவண்டிகள், சைக்கிள்கள் போன்ற பொருட்களை வீசி எறிந்து ரயில் பயணங்களைத் தடுத்தனர்.
சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங்கிற்குச் செல்லும் ஒரு விமானப் பணம் ரத்து செய்யப்பட்டதாக சாங்கி அனைத்துலக விமான நிலையம் தெரிவித்தது. ஹாங்காங்கில் இதுவரை 209 விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் விமான ஆணையம் தெரிவித்திருக்கிறது.
ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் இந்த ஆர்ப்பாட்டங்களைக் கண்டித்துள்ளார். அத்துடன், தாம் பதவி விலகப் போவதில்லை என்று அவர் இன்று காலை 10 மணி அளவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தின் முன்னிலையில் மீண்டும் கூறினார்.
"ஏழு மில்லியன் பேரின் நலன் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எங்களது பணியில் உறுதியுடன் நீடிக்கவேண்டிய பொறுப்பு என் கையிலும் எனது சகாக்களின் கையிலும் உள்ளது," என்றார் திருவாட்டி லாம்.
சட்டவிரோதமாக கூட்டம் போடுவது, ஆபத்தான ஆயுதங்களை வைத்திருப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் போலிசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை 34 பேரைக் கைது செய்துள்ளனர்.

