ஹாங்காங்: வேலைநிறுத்தம், போராட்டங்களால் ஹாங்காங்கின் சாலை, விமான போக்குவரத்துகள் முடங்கின. இதன் காரணமாக 77 விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த பத்தாண்டுகளில் என்றும் காணாத வகையில் ஹாங்காங்கில் நிலைமை மோசமடைந்து வருகின்றது.
நேற்று 10 வெவ்வேறு இடங்களில் போராட்டக்காரர்கள் நடத்திய ஆர்பாட்டங்களால் பல இடங்களில் போக்குவரத்து நிலைகுத்தியது.
போராட்டக்காரர்களைக் கலைக்க போலிசார் கண்ணீர் புகையைப் பயன்படுத்தினர்.
இதன் காரணமாக அட்மிரால்டி, வோங் தை சின், டின் சுய் வாய் மற்றும் தை போ ஆகிய இடங்களில் உள்ள தமர் பூங்காவில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து ஓடினர்.
சில ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜோர்டான்-யாவ் மா டீ பகுதியில் உள்ள சாலைகளை முடக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
மேலும், ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தின் செயல்பாடுகளும் கடுமையாக சீர்குலைந்தன.
அனைத்துலக பார்வையாளர்களைச் சென்றடையும் வகையில் நடந்துகொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்கள் குறித்த பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
77 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சிவில் ஏவியேஷன் துணை இயக்குநர் ஜெனரல் ரேமண்ட் என்ஜி தெரிவித்தார். இதுபற்றி கூடுதல் விவரங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை.
மூத்த போலிஸ் கண்காணிப்பாளர் காங் விங் சியுங், போலிஸ் படைக்கு அரசாங்கத்தின் முழு ஆதரவும் இருப்பதாகக் கூறினார்.
இந்நிலையில் ஹாங்காங் விவகாரம் தொடர்பாக இன்று சீனா இரண்டாவது முறையாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையே, பல வாரகால ஆர்ப்பாட்டங்கள் ஹாங்காங்கை ஆபத்தான நிலைக்குத் தள்ளியுள்ளதாகக் கூறியுள்ளார் ஹாங்காங் தலைவர் கேரி லாம்.
தற்போதுள்ள நிலையில் தாம் பதவி விலகப் போவதில்லை என்றும், ஹாங்காங் மக்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சந்தேக நபர்களைச் சீனாவுக்கு அனுப்பி விசாரிக்க வகை செய்யும் சர்ச்சைக்குரிய மசோதா தொடர்பில் ஹாங்காங்கில் கடந்த மாதம் முதல் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

