பெய்ஜிங்: சீனா-அமெரிக்கா வர்த்தகப் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், அமெரிக்க விவசாய பொருட்களின் இறக்குமதியை நிறுத்தி வைக்குமாறு சீனா தனது அரசுக்கு சொந்தமான நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
வரும் செப்டம்பர் 1 முதல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கூடுதலாக 10% கட்டணம் சேர்க்க உத்தரவிட்டார்.
டிரம்பின் இந்த அறிவிப்பால் அதிர்ந்து போன பெய்ஜிங், அமெரிக்காவிற்குத் தக்க பதிலடி கொடுக்கப்போவதாக கூறியிருந்தது.
இந்நிலையில், சீன அரசாங்கத்தின் விவசாய நிறுவனங்கள் அமெரிக்க பண்ணை பொருட்களை வாங்குவதை நிறுத்திவிட்டன.
"வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் எவ்வாறு செல்கின்றன என்பதைக் காண காத்திருக்கிறார்கள்," என்று பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறுகிறது.
இதுபற்றி மூத்த ஆய்வாளர் ஒருவர் அளித்த பேட்டியில், "இது அமெரிக்க விவசாயிகளையும் பொதுவாக டிரம்பிற்கு ஆதரவாக இருக்கும் கிராமப்புற அமெரிக்க வாக்காளர்களையும் பாதிக்கும்," என்றார்.
சீனா ஏற்கெனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோயா பீன் அளவைப் பெருமளவு குறைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

