சிலாங்கூர் ஆலயத்தில் சண்டை: 28 பேர் கைது

சிலாங்கூர் ஆலயத்தில் சண்டை: 28 பேர் கைது

1 mins read

பெட்டாலிங் ஜெயா: கோலா சிலாங்கூர் ஆலயச் சண்டை தொடர்பில் 28 பேரைத் தடுப்புக் காவலில் வைத்துள்ளதாக மலேசிய போலிசார் தெரிவித்துள்ளனர்.

கோலா சிலாங்கூரில் உள்ள காளியம்மா பெஸ்டாரி ஜெயா கோவிலில், கூடாரங்களை அமைப்பது தொடர்பாக இரு குழுக்களிடையே தொடங்கிய வாக்குவாதம் சண்டையாக முற்றியது. இசச்சம்பவம் நேற்று முன்தினம் காலை 9.15 மணியளவில் நடந்தது.

சண்டையின்போது அவர்கள் பெரிய கத்திகளைப் பயன்படுத்தியதாக சிலாங்கூர் குற்ற விசாரணை துறையின் தலைவர் கூறினார்.

அங்கு பணியில் இருந்த போலிஸ்காரர்கள் சண்டையைத் தடுக்க முற்பட்டபோது, அவர்களும் தாக்கப்பட்டனர் என்றும் அவர் சொன்னார்.

"பெஸ்டாரி ஜெயா காவல் நிலையத்தைச் சேர்ந்த 34 வயது போலிஸ்காரர் ஒருவர் கையின் பின்புறத்தில் காயமடைந்து ஆறு தையல்கள் போடப்பட்டுள்ளன," என்று அவர் சொன்னார்.

போலிஸ்காரர்கள் தவிர பொதுமக்களில் ஒருவரும் காயமடைந்ததாகவும் அவர் சுங்கை புலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் போலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தேக நபர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர்.

"நாங்கள் சந்தேக நபர்களிடமிருந்து ஐந்து கத்திகளை கைப்பற்றினோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது," என்றார் அதிகாரி.

கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தது குறித்த அதிருப்திதான் சண்டைக்குக் காரணமாக இருக்கும் என்று போலிசார் நம்புகின்றனர்.