பல ஆண்டுகளாகக் காணாமல் போயிருந்த ஒரு புத்தர் கோயிலை வறட்சி கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறது.
கோயில் மூழ்கிக்கிடந்த அணைக்கட்டு நீர்த்தேக்கத்தில் வறட்சியால் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்தபோது, கோயில் கண்டுபிடிக்கப்பட்டது.
மத்திய தாய்லிந்திலுள்ள அந்தக் கோயிலைக் காண ஆயிரக்கணக்கானோர் படையெடுத்துச் செல்கின்றனர்.
இருபது ஆண்டுகளுக்குமுன் அணைக்கட்டு கட்டப்பட்டபோது வாட் நொங் புவா யாய் புத்தர் கோயில் நீருக்கடியில் மூழ்கிப்போனது.
கோயிலின் இடிபாடுகளுக்கு இடையே நடந்துசென்ற நூற்றுக்கணக்கான மக்களில் சில பௌத்த துறவிகளும் இருந்தனர். கோயிலின் தரையில் மீன்கள் இறந்துகிடந்தன.
கோயிலிலிருந்த நான்கு மீட்டர் உயரமான தலையில்லாத புத்தர் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
"இக்கோயில் வழக்கமாக நீருக்கடியில் இருக்கும். மழைக்காலத்தில் எதையும் பார்க்க முடியாது," என்று கோயிலைக் காணச் சென்றவர்களில் ஒருவரான 67 வயது ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு சொம்ச்சாய் ஒர்ன்சவியாங் கூறினார்.
தாய்லாந்து பத்தாண்டுகளில் காணாத கடுமையான வறட்சியை எதிர்நோக்குவதாக வானிலை ஆய்வகம் தெரிவித்தது.
நாடெங்கிலும் உள்ள அணைக்கட்டுகளில் நீர்மட்டம் மாதாந்தர சராசரிக்குக் கீழே குறைந்துள்ளது.

