ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சீனா கடும் எச்சரிக்கை

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சீனா கடும் எச்சரிக்கை

2 mins read

பெய்ஜிங்: ஹாங்காங் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 'நெருப்புடன் விளையாடினால் பேராபத்து ஏற்படும்' என்று சீனா எச்சரித்திருப்பதாக ஹாங்காங்கில் உள்ள சீனாவின் உயர் கொள்கை அலுவலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஹாங்காங்கில் பல வாரங்களாக ஆர்ப்பாட்டங்கள் நீடிப்பதற்கு முக்கிய காரணம் சீனாவை எதிர்ப்பவர்களே என்றும் அப்பேச்சாளர் கூறினார்.

ஹாங்காங்கில் கடந்த ஒன்பது வாரங்களாக அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கின்றன. ஆர்ப்பாட்டங்கள் நீடிப்பது மிகவும் ஆபத்தான நிலவரம் என்று ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் எச்சரித்தார். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் அவர்களின் குறிக்கோள்கள் நிறைவேற சர்ச்சைக்குரிய மசோதாவை கேடயமாகப் பயன்படுத்துகின்றனர் என்று திருவாட்டி கேரி லாம் கூறினார்.

ஊடகத்துறையினருக்கு ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு கூறினார்.

ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சீனாவுக்கு அனுப்பி விசாரிக்க வழிவகுக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. அந்த வரிசையில் திங்கட்கிழமை நடந்த ஆர்ப்பாட்டங்களால் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன. பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க போலிசார் அவர்கள் மீது கண்ணீர்ப் புகை குண்டுகளைப் பயன்படுத்தினர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

திங்கட்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது 148 பேர் கைது செய்யப்பட்டதாக போலிசார் கூறியுள்ளனர். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ஆண்களில் 95 பேரும் பெண்களில் 53 பேரும் கைது செய்யப்பட்டதாக ஹாங்காங் போலிசார் கூறினர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 13 வயதுக்கும் 63 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

நேற்று நடந்த செய்்தியாளர்கள் கூட்டத்தில் போலிசார் இந்த விவரங்களைத் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பல முறை கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியதாகவும் போலிசார் தெரிவித்தனர்.

போலிஸ் நிலையங்கள் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசித் தாக்கியதில் மொத்தம் 21 போலிஸ் நிலையங்கள் சேதம் அடைந்ததாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலிசார் வன்முறையைக் கையாளுவதாக ஆர்ப்பாட்டத் தரப்பினர் கூறியுள்ளனர்.