மகளைப்போல் மாறுவேடமிட்டு தப்பிக்க முயன்ற கைதி

மகளைப்போல் மாறுவேடமிட்டு தப்பிக்க முயன்ற கைதி

2 mins read

ரியோடி ஜெனிரோ: பிரேசிலில் ஒரு கைதி தன் மகளைப்போல் மாறுவேடமிட்டு சிறைச்சாலையிலிருந்து தப்பிக்க முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் கூறினர்.

'சிலிக்கான்' முகமூடி, பொய் முடி, பெண்கள் அணியும் ஆடை என்று தன் பதின்ம வயது மகளைப் போல் மாறுவேடமிட்டு சிறையிலிருந்து தப்பிக்க நினைத்த 42 வயது கைதியின் திட்டம் தவிடுபொடியானது.

பிரேசிலிய குண்டர் கும்பல் தலைவன், கிளாவினியோ சில்வா, தனது 19 வயது மகளைப் போல மாறுவேடமிட்டு தப்பிக்க நினைத்தார்.

ஏற்கெனவே போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காக அவருக்கு 73 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

சில்வா சிறையைவிட்டுத் தப்பிக்க முயற்சி செய்வது இது முதல் முறையல்ல.

சிறையில் தன்னைப் பார்க்க வந்த மகளைப் போல் மாறுவேடமிட்டு சிறைச்சாலையின் முன் வாசல் வழியாக வெளியேற கிளாவினியோ முயற்சி செய்துள்ளார்்.

பிளாஸ்டிக் முகமூடி அணிந்து ஒரு பெண் போல் மாறுவேடத்தில் சில்வா, சிறையைவிட்டு வெளியேறும்போது மிகவும் பதற்றத்துடன் இருப்பதைக் கண்ட சிறை அதிகாரிகள் அந்த 'இளம் பெண்ணை' தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அவரை உற்று கவனித்த போதுதான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உண்மை புலப்பட்டது.

அதன் பின்னர் தனது மாறுவேடத்தை ஒன்றன்பின் ஒன்றாக அகற்றியபோது, குற்றவாளியின் உண்மை முகம் வெளிப்பட்டது. தனது மகளைச் சிறையிலேயே இருக்கச் சொல்லிவிட்டு தப்பித்துச் செல்வதுதான் கைதியின் திட்டம். இந்தத் திட்டத்தில் மகளுக்கும் பங்கு உண்டா என்பதை அறிய போலிசார் விசாரித்து வருவதாகத் தெரிகிறது.

பிரேசில் சிறைச்சாலைகளில் கலவரம் ஏற்படுவதும் கைதிகள் தப்பிச்செல்வதும் புதிதல்ல.

பிரேசிலில் உள்ள சிறைச் சாலையில் அளவுக்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் சிறைச்சாலைகளில் கலவரம்் மூள்வதும் கைதிகள் தப்பிச் செல்வதும் அடிக்கடி நடப்பதாகக் கூறப்படுகிறது.