கோலாலம்பூர்: மலேசியாவில் நெகிரி செம்பிலான் உல்லாச விடுதியில் தன் பெற்றோருடன் தங்கியிருந்த 15 வயதுச் சிறுமி காணாமற்போனதைத் தொடர்்ந்து அச்சிறுமியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த நோரா குயுரின் தன் பெற்றோருடன்
நெகிரி செம்பிலானில் உள்ள டூசுன் பந்தாய் விடுதியில் தங்கியிருந்தார். ஞாயிற்றுக்கிழமை
காலை கண்விழித்த பெற்றோர் தன் மகள் காணாமற்போனதை அறிந்து போலிசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து சிறுமியைத் தேடி கண்டுபிடிக்கும் பணியை போலிசார் தீவிரப்படுத்தியுள்ளனர். காடுகளிலும் அருகில் உள்ள கிராமங்களிலும் அச்சிறுமியை தேடி வருவதாகவும் சுமார் 160 பேர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் போலிசார் கூறினர்.
அச்சிறுமி அந்த விடுதியிலிருந்து காணாமல் போயிருப்பதாகவும் மற்றபடி அச்சிறுமியை யாரும் கடத்திச்செல்லவில்லை என்றும் போலிசார் கூறியுள்ளனர்.
விடுமுறைப் பயணமாக அச்சிறுமி தன் பெற்றோருடன் நெகிரி செம்பிலானில் உள்ள உல்லாச விடுதி்க்கு சனிக்கிழமை வந்ததாகவும் மறுநாள் காலை அச்சிறுமி காணாமல் போனதாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.
அச்சிறுமி நினைவாற்றல் குறைந்த பெண் என்று கூறப்படுகிறது. ஹோட்டல் அறையிலிருந்து அச்சிறுமி வழி தவறிச் சென்றிருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.

