அமெரிக்காவும் தென் கொரியாவும் நடத்தும் இராணுவப் பயிற்சிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காகவே ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டதாக வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் கூறியிருக்கிறார். இத்தகவலை வடகொரிய ஊடகமான கேசிஎன்ஏ (KCNA) இன்று (7 ஆகஸ்ட்) வெளியிட்டது.
ஏவுகணைகள் பாய்ச்சப்படுவது நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பிற்கு வடகொரியத் தலைவர் வழங்கிய உறுதிமொழியை அமெரிக்காவின் தேசிய தற்காப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் கடந்த செவ்வாய்க்கிழமை நினைவூட்டினார்.
இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலகட்டத்தில் வடகொரியா அதன் நான்காவது குறுந்தொலைவு ஏவுகணையைப் பாய்ச்சியதோடு, "ஒரு புதிய பாதையை" மேற்கொள்ளவிருப்பதாக எச்சரித்ததையும் தொடர்ந்து வடகொரியாவிற்கு இந்த நினைவூட்டல் விடுக்கப்பட்டது.
அமெரிக்காவும் தென்கொரியாவும் நடத்தும் இராணுவப் பயிற்சிகளுக்குத் தகுந்த எச்சரிக்கை விடுக்க தனது நாட்டின் இராணுவ நடவடிக்கை ஒரு வாய்ப்பாக அமைந்தது என்று திரு கிம் கூறியதாக கேசிஎன்ஏ ஊடகம் தெரிவித்துள்ளது.

