வாஷிங்டன்: வடகொரியா அதன் அணுவாயுதத் திட்டங்களுக்கு தேவையான நிதியைப் பெறுவதற்காக, இணைய திருட்டில் ஈடுபட்டு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலரை அந்நாடு பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கிகள் மற்றும் 'கிரிப்டோகரன்சிகள்' எனும் மின்னணு பணத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட இணையத் தாக்குதல்கள் மூலம் இரண்டு பில்லியன் டாலரை வடகொரியா திருடியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான 35 இணையத் தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விசாரித்து வருவதை பிபிசி நாளிதழுக்கு கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், வடகொரியாவின் அணுவாயுதத் திட்டங்களுக்கு மூன்று முன்னணி சீன வங்கிகள் நிதி வழங்கியதன் தொடர்பில் அமெரிக்கா விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட சீன வங்கிகள் வேண்டுமென்றே சட்டத்தை மீறியதாக வழக்கறிஞர்கள் தற்போது சந்தேகிக்கவில்லை என்றாலும் வடகொரியா அதன் அணுவாயுத திட்டங்களுக்கு எவ்வாறு நிதியைப் பெறுகிறது என்பது குறித்த விவரங்களை அந்த வங்கிகள் வைத்திருக்கலாம் என அமெரிக்க அரசாங்கம் கருதுகிறது.
வங்கிகளிடமிருந்து நிதி பெறும் திட்டம் குறைந்தது ஐந்து ஆண்டுகள் நீடித்திருக்கும் என்ற அடிப்படையில், 2012 முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான வங்கி பதிவுகளை அமெரிக்கா நாடுகிறது. இது குறித்த செய்திகளை அமெரிக்கா முன்பே அறிந்திருந்தாலும் இப்போதுதான் விசாரணை மேற்கொள்கிறது.

