பியோங்யாங்: அண்மையில் வடகொரியா நடத்திய ஏவுகணைச் சோதனை, அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை என்று வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க, தென்கொரிய ராணுவங்கள் இடையே கூட்டுப் பயிற்சி திங்கட்கிழமை தொடங்கியது. இதைக் கண்டித்துள்ள வடகொரியா, ஒப்பந்தத்தை மீறும் வகையில் இரு நாடுகளும் செயல்படுவதாக எச்சரித்துள்ளது. ஆத்திரத்தை வெளிப்படுத்தும் விதமாக நேற்று முன்தினம் புதிய ரக ஏவுகணைச் சோதனைகளையும் வடகொரியா நடத்தியது. அந்நாட்டின் தெற்கு வாங்கே மாகாணத்தில் இருந்து இரு ஏவுகணைகளை வடகொரியா ஏவியது. இரு வாரத்தில் அந்நாடு நடத்திய நான்கு ஏவுகணைச் சோதனைகளால் கொரிய தீபகற்பத்தை மீண்டும் பதற்றம் சூழ்ந்து கொண்டுள்ளது. இந்த நிலையில், ஏவுகணைச் சோதனை குறித்து பேசியுள்ள திரு கிம், கூட்டுப் பயிற்சியில் ஈடுபடும் அமெரிக்கா, தென்கொரியாவை எச்சரிப்பதற்கான சந்தர்ப்பம் இது என்று கூறியுள்ளதாக கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

