வாட்ஸ்அப் குறைபாட்டினால் கணினி ஊடுருவிகளால் தகவல்களை மாற்றியமைக்க முடியும்: இணையப் பாதுகாப்பு நிறுவனம்

வாட்ஸ்அப் குறைபாட்டினால் கணினி ஊடுருவிகளால் தகவல்களை மாற்றியமைக்க முடியும்: இணையப் பாதுகாப்பு நிறுவனம்

1 mins read
da80bcb1-ae7f-41b6-bc03-a467dd05d767
-

நியூயார்க் (புளூம்பர்க்): பிரபலமான தகவல் அனுப்பும் வாட்ஸ்அப் செயலியில் உள்ள குறைபாடுகளைக் கண்டுபிடித்திருப்பதாக செக் பாயின்ட் சாஃப்ட்வேர் டெக்னாலஜீஸ் எனும் இஸ்ரேலிய இணையப் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்தக் குறைபாடுகளினால், பொது மற்றும் தனிப்பட்ட உரையாடல்களின் தகவல்களைக் கணினி ஊடுருவிகளால் மாற்றியமைக்க இயலும். இதனால், நம்பகமான மூலங்களிலிருந்து தவறான தகவல்கள் பரப்பப்படலாம்.

கணினிக் கட்டமைப்புகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் இந்நிறுவனம், உரையாடல்களில் மாற்றம் செய்வதற்கான மூன்று உத்தேச வழிகளைத் தனது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருப்பதாகக் கூறியது.

குழு உரையாடலில் தகவல் அனுப்புநரின் அடையாளத்தை மாற்றுவது ஒரு வழி. ஒருவரின் பதில் தகவலை மாற்றுவது மற்றொரு வழி.

ஒரு குழு உரையாடலில் அனைவருக்கும் அனுப்பப்படும் பொதுவான தகவல் என்ற போர்வையின்கீழ் தனிப்பட்ட தகவலை ஒருவருக்கு மட்டும் அனுப்புவது இன்னொரு வழி. இது சரிசெய்யப்பட்டது.

நிறுவனத்தின் கண்டுபிடிப்பு பற்றி வாட்ஸ்அப் பேச்சாளர் கருத்துரைக்க மறுத்துவிட்டார்.

வாட்ஸ்அப் செயலியைச் சுமார் 1.5 பில்லியன் பேர் பயன்படுத்துவதால், இந்தக் குறைபாடுகளால் குறிப்பிடத்தக்க விளைவுகள் நேரலாம் என்று நிறுவனத்தின் பொருள் பலவீன ஆய்வுப் பிரிவின் தலைவர் திரு ஒடெட் வனுனு குறிப்பிட்டார். இந்தக் குறைபாடுகள் பற்றி வாட்ஸ்அப் செயலியின் உரிமையாளரான ஃபேஸ்புக் நிறுவனத்திடம் சென்ற ஆண்டு தெரியப்படுத்தப்பட்டது. ஆனால், ஒரே ஒரு குறைபாட்டை மட்டுமே நிறுவனம் சரிசெய்திருக்கிறது.