மலேசிய மாணவர் ஆஸ்திரேலியாவில் மரணம்

மலேசிய மாணவர் ஆஸ்திரேலியாவில் மரணம்

2 mins read
4b82f870-10d5-4b3f-8cb8-d56bee01c909
-

ஐந்து பாடங்களில் தேர்ச்சி பெறாத 22 வயது மாணவர் ஒரு கட்டடத்திலிருந்து விழுந்து இறந்தார். ஆஸ்திரேலியாவிற்குப் படிக்கச் சென்ற பேராக்கைச் சேர்ந்த அமீருலின் சடலம் அடுத்த வாரம் மலேசியாவிற்குத் திரும்பவுள்ளது.

'மெக்கட்ரோனிக்ஸ்' எனப்படும் இயந்திர மிண்ணுவியல் பொறியியல் பாடத்தின் இறுதி ஆண்டு மாணவரான அமீருல் அஷ்ராஃப், சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் பயின்றார்.

லங்காவி மாரா அறிவியல் தொடக்கக் கல்லூரியில் இதற்கு முன்பு பயின்ற அமீருல், மாரா எனப்படும் மலேசிய அரசு நிறுவனம் வழங்கிய நிதியுதவியுடன் ஆஸ்திரேலியாவிற்குச் சென்று தமது கல்வியை மேற்கொண்டார். தாம் ஐந்து பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என்றும் மாராவிடம் மேல்முறையீடு செய்வதன் மூலம் மறுபடியும் அப்பாடங்களை மேற்கொள்ளலாம் என்றும் அமீருல் கூறியதாகச் செய்தியாளர்களிடம் பேசிய அமீருலின் தந்தை திரு அஸார் அப்துல்லா தெரிவித்தார்.

அமீருல் ஒரு நல்ல பையன் என்றும் தமது இரு உடன்பிறப்புகளுக்கும் நல்ல முன்மாதிரியாக அவர் திகழ்ந்ததாகவும் திரு அஸார் வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார்.

திரு அஸாருடன் தொடர்புகொண்டு பேசிய அமீருலின் நண்பர்கள், அவருக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்றும் இச்சம்பவத்திற்கு முன்பாகவே அவரது பிறந்தநாளை அவர்கள் கொண்டாடியதாகவும் கூறினர்.

இதற்கிடையே, அமீருல் தான் தேர்ச்சி பெறாத ஐந்து பாடங்கள் குறித்து அனுப்பிய மேல்முறையீடு அனுமதிக்கப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.

பிரேத பரிசோதனை முடிந்தவுடன் அமீருலின் சடலம் ஆசாம் கும்பாங்கில் வசிக்கும் அவரது பெற்றோரிடம் சேர்க்கப்படும் என்று புறநகர் மேம்பாட்டு அமைச்சரான டாட்டுக் செரி ரீனா ஹாருன் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தை அறிந்தவுடன் அமீருலின் குடும்பத்தினரிடம் இது குறித்து தெரிவித்த மாரா அதிகாரிகள், அவர்கள் ஆஸ்திரேலியாவிற்குச் சென்று தங்களது மகனின் சடலத்தைக் காண்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து தர முன் வந்தனர். ஆனால் மாராவின் உதவியின் மூலம் அவர் மலேசியாவிற்குத் திரும்பட்டும் என்று அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர்.