கோத்தாகினபாலு: மலேசியாவில் இ்ந்த வாரத் தொடக்கத்தில் காணாமற்போன 15 வயது பிரிட்டிஷ் சிறுமியைத் தேடும் பணி தொடரும் வேளையில் மலேசியப் போலிசார் சுமார் 20 பேரிடம் அது தொடர்பில் விசாரித்து வருவதாக போலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கோலாலம்பூரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிரம்பானில் டூசுன் உல்லாச விடுதியில் தங்கியிருந்த 15 வயது சிறுமியான நோரா அன் குய்ரினை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை.
விடுமுறைப் பயணமாக தன் பெற்றோருடன் மலேசியா வந்த அச்சிறுமி சிரம்பானில் உள்ள அந்த ஹோட்டலில் தங்கியிருந்ததாக போலிசார் கூறினர். தங்கள் மகளை ஞாயிற்றுக்கிழமையிலிருந்து காணவில்லை என்று பெற்றோர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து சிறுமியைத் தேடும் பணி தொடங்கியது. அச்சிறுமி நினைவாற்றல் குறைந்த பெண் என்று கூறப்படுகிறது.
அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் காடுகளில் சிறுமியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலிசார் கூறினர். அத்துடன் கிராம மக்களும் தொண்டூழியர்களும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அச்சிறுமியின் பெற்றோர் மற்றும் அந்த விடுதி ஊழியர்கள் உட்பட பலரை விசாரித்து வருவதாகவும் அந்தச் சிறுமி தங்கியிருந்த விடுதி ஹோட்டல் அறையில் கைரேகை அடையாளங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் நெகிரி செம்பிலான் போலிஸ் படை துணைத் தலைவர் சி ஸகாரியா கூறினார்.
தங்கள் விசாரணை தொடர்வதாகவும் அந்த விடுதியின் சுற்று வட்டாரப் பகுதியில் தடயங்களைத் தேடும் பணியில் தடயவியல் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
சிறுமி காணாமல் போன பகுதியில் சுமார் 200 பேர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த விடுதிக்குச் செல்லும் சாலையில் ஒரு போலிஸ் சாவடி அமைக்கப்பட்டுள்ளதாகவும் திரு ஸகாரியா கூறினார். ஆளில்லா விமானங்களும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார். அச்சிறுமி கடத்தப்படவில்லை என்றும் அந்த விடுதியின் சுற்று வட்டாரப் பகுதியில்தான் சிறுமி இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் நம்புவதாகவும் திரு ஸகாரியா கூறினார்.ஆனால் அச்சிறுமியை யாரேடும் கடத்திச் சென்றிருக்கலாம் என்று தாங்கள் சந்தேகிப்பதாக சிறுமியின் பெற்றோர் கூறியுள்ளனர்.
நினைவாற்றல் குறைந்்த பெண் என்று கூறப்படும் அச்சிறுமி வெகு தொலைவு சென்றிருக்க முடியாது என்றும் இதனால் விரைவில் அச்சிறுமியை கண்டுபிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாகவும் திரு ஸகாரியா கூறியுள்ளார்.

