காஷ்மீரில் ஊரடங்கு நீட்டிப்பு

காஷ்மீரில் ஊரடங்கு நீட்டிப்பு

2 mins read
e5f555cd-e79f-4141-875a-98c8a5207ea9
-

ஜம்மு: காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதற்கு காஷ்மீரில் பரவலாக கடும் எதிர்ப்பு காணப்படுகிறது.

அங்குள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் மத்திய அரசின் முடிவுக்கு கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றன.

மாநிலம் முழுவதும் கொந்தளிப்பான சூழல் காணப்படுவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு, தகவல் தொடர்பு துண்டிப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

காஷ்மீரில் பொது அமைதிக்கு மிரட்டலாக இருப்போரை ஒடுக்கும் வகையில் அரசியல் தலைவர்கள், பல்துறை ஆர்வலர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு இருப்பதாக மாநில நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் கடந்த 4ஆம் தேதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதைபோல் காஷ்மீர் மக்களின் மாநாடு என்ற கட்சி தலைவர்களான சஜத் லோன், இம்ரான் அன்சாரி ஆகியோரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே, ஜம்மு வட்டாரத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மூன்றாவது நாளாக நீட்டிக்கப்பட்டன.

ஸ்ரீநகரில் 5 பேருக்கு மேல் இணைந்து செல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

காஷ்மீரில் ஆயிரக்கணக்கான அரசாங்கப் படைகள் சுற்றுக்காவலில் ஈடுபட்டு வருவதால் அவசிய பொருட்களை மக்கள் வாங்குவது சிரமமாகி இருக்கிறது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தாகி இருப்பதை அடுத்து காஷ்மீர் பெண்களைத் திருமணம் செய்துகொள்ள தயார் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள். இதை மனிதஉரிமை அமைப்புகள் கண்டித்து உள்ளன.