ஹாங்காங்கில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

ஹாங்காங்கில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

2 mins read
795dfa8a-44aa-4ba4-b717-25c74980a6f2
ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலிசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் அவர்கள் அந்த இடத்தைவிட்டுச் செல்லவில்லை. பேரணியின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் லேசர் ஒளிக்கற்றைகளை பயன்படுத்தியதைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டதாக போலிசார் கூறினர். படம்: இபிஏ -

ஹாங்காங்: ஹாங்காங் பயணத்தை தற்போதைக்கு தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ள வேளையில் ஹாங்காங்கில் போராட்டங்களைத் தொடர ஆர்ப்பாட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்று தொடங்கி வார இறுதி நாட்களில் பல இடங்களில் பேரணி, ஊர்வலம் போன்ற போராட்டங்களை நடத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில் பெரிய அளவில் பேரணி நடத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டங்கள் நீடிப்பதால் ஹாங்காங் பயணத்தை தற்போதைக்கு தவிர்க்குமாறு அங்கு செல்லத் திட்டமிட்டுள்ள அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் ஆலோசனை கூறியுள்ள வேளையில் ஆஸ்திரேலியாவும் பயணிகளுக்கு இது போன்ற பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஹாங்காங்கில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பல வாரங்களாக நீடிக்கின்றன.

ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சீனாவுக்கு அனுப்பி விசாரிக்க வகை செய்யும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு போராட்டங்கள் நீடிக்கின்றன. அந்த மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் அறிவித்த போதிலும் இன்னும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, நியாயமற்ற வீடமைப்பு கொள்கை போன்றவற்றால் அதிருப்தி அடைந்தவர்களும் போராட்டங்களில் கலந்துகொள்கின்றனர். இளவயதினரும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பல இடங்களில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்கார்கள் மீது போலிசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியபோது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் நீதித்துறை சுதந்திரத்தை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் அமைதிப் பேரணி நடத்தினர். கடந்த இரு மாதங்களில் போலிசார் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 589 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுள் இள வயதினரும் அடங்குவர் என்று போலிசார் கூறினர். கலகம் விளைவித்ததாக பலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.