வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சஸ், ஒஹையோ ஆகிய இரு மாநிலங்களில் சில நாட்களுக்கு முன்பு நடந்த இரு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் காயம் அடைந்தவர்களையும் அத்தாக்குலில் உயிர் பிழைத்தவர்களையும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட டேடன், எல் பாசோ ஆகிய நகரங்களுக்கு சென்றிருந்த திரு டிரம்ப், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்துப் பேசினார். எந்த சூழலிலும் அமெரிக்க மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று திரு டிரம்ப் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் அவ்விரு நகரங்களிலும் திரு டிரம்ப்பிற்கு எதிராக சிலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் கூறின. துப்பாக்கி கட்டுப்பாட்டுக்கு உரிய நடவடிக்கைகளை திரு டிரம்ப் எடுக்கத் தவறிவிட்டதாகக் கூறும் சிலர் திரு டிரம்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில் திரு டிரம்ப்பின் ஆதரவாளர்களும் அதிபருக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில் தெருக்களில் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
டெக்சஸ் மாநிலத்தில் உள்ள எல் பசோ நகரிலும் ஒஹையோவில் உள்ள டேடன் நகரிலும் கடந்த சனிக்கிழமை துப்பாக்கிக்காரன் சுட்டதில் மொத்தம் 31 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கிுச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் பயங்கரவாதிகளின் கைகளில் துப்பாக்கி கிடைக்காமல் இருக்க துப்பாக்கிச் சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று அமெரிக்காவில் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் திரு டிரம்ப், துப்பாக்கி கட்டுப்பாடு குறித்த எந்்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பலர் கூறி வருகின்றனர். இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

