ஹாங்காங் விமான நிலையத்தில் திரண்ட போராட்டக்காரர்கள்

ஹாங்காங் விமான நிலையத்தில் திரண்ட போராட்டக்காரர்கள்

2 mins read
c65b1f78-b371-403b-a43b-361452346a12
ஹாங்காங் விமான நிலையித்தில் திரண்ட கறுப்புச் சட்டை அணிந்த நூற்றுக்கும் அதிகமாக போராட்டக்காரர்கள் விமானப் பயணிகளிடம் துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்தனர். படம்: இபிஏ -

ஹாங்காங்: ஹாங்காங் விமான நிலையத்தின் வருகைக் கூடத்தில் திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் அங்கிருந்த பயணிகளிடம் அரசாங்க எதிர்ப்பு துண்டு பிரசுரங்களைக் கொடுத்தனர்.

மேலும் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட பதாகைகளையும் அவர்கள் ஏந்தி வலம் வந்தனர்.

வரும் வார இறுதியில் நடைபெறவுள்ள போராட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர்கள் இவ்வாறு செய்தனர்.

அன்பு பயணிகளே என்ற ஆங்கிலத் தலைப்பில் அவர்கள் கொடுத்த துண்டு பிரசுரங்களில், "நீங்கள் எதிர்பாராத நிகழ்வுக்காக எங்களை மன்னித்துவிடுங்கள்.

"நீங்கள் உடைந்த ஒரு நகரத்திற்கு வந்துள்ளீர்கள். ஆனால், நாங்கள் எங்கள் நாட்டின் எதிர்காலத்திற்காக போராடுகிறோம்," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

விமான நிலையத்தில் போலிஸ் காரர்கள் யாரும் காணப்படவில்லை என்கின்றன தகவல்கள்.

"போலிஸ்காரர்கள் வராதவரை எங்கள் போராட்டம் அமைதியான முறையில் இருக்கும். எங்கள் செய்தியை அனைத்துலக அளவில் கொண்டு செல்வதே எங்கள் நோக்கம்.

"நாங்கள் ஜப்பான் முதல் ஸ்பானிய மொழி வரை மொத்தம் 16 மொழிகளில் பதாகைகள் தயாரித்து உள்ளோம்.

"நாங்கள் வன்முறையாளர்கள் அல்ல. மனித உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடும் ஹாங்காங் மக்கள்," என்றார் போராட்டக்காரர்களில் ஒருவரான 16 வயது சார்லட் லாம்.

இந்நிலையில், ஹாங்காங்கின் பொருளாதாரம் சார்ஸ் நோய் தொற்றின்போது சரிந்ததைவிட தற்போதைய ஆர்ப்பாட்டங்களால் மோசமான சரிவைச் சந்தித்துள்ளதாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது கூறினார் ஹாங்காங் தலைவர் கேரி லாம்.

எனவே வேற்றுமைகளை மறந்து நாட்டின் மறுசீரமைப்பிற்காக அனைவரும் ஒன்று கூட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே, பயணத்திற்கான தக்க ஆவணங்கள் கொண்டவர்கள் மட்டுமே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என்று ஹாங்காங் விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

2014 ஆம் ஆண்டில் ஹாங்காங்கை உலுக்கிய ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டங்களை மேற்பார்வையிட்ட முன்னாள் துணை போலிஸ் ஆணையர் ஆலன் லாவ் யிப் ஷிங், தற்போதைய ஆர்ப்பாட்டங்களைச் சமாளிக்கும் வகையில் திரும்ப அழைக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சில வகை குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைச் சீனாவிற்கு நாடு கடத்தும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டக்காரரர்கள் கடந்த இரண்டு மாத காலமாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.