மணிலா: உள்ளூர் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கும் நோக்கில் இலங்கையில் இருந்து இரண்டு தீவிரவாதிகள் ஊடுருவிதாக பிலிப்பீன்ஸ் கூறுகிறது.
கண்காணிப்பு பட்டியலின் அடிப்படையில், மணிலா விமான நிலைய அதிகாரிகள் அந்த இருவரையும் மார்க் கெவின் சம்ஹுன், விக்டோரியா சோபியா டிமினிகோ என்று அடையாளம் கண்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர்கள் என்று அறியப்படுகிறது.
தவ்ஹீத் ஜமாத் எனும் தீவிரவாத அமைப்புடன் சம்ஹுனுக்குத் தொடர்பு உள்ளதாகவும் இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவன் என்று கண்காணிப்பு பட்டியலின் அடிப்படையில் விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.
சம்ஹுனின் தாய் பிலிப்பீன்சைச் சேர்ந்தவர் என்றும் துபாயில் அவர் பணிப்பெண்ணாக வேலைப் பார்ப்பதாகவும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
பிலிப்பீன்சில் உள்ள தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்து நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள தேவாலயங்கள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி அளிக்கவும் அவர்கள் திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
சோபியா எனும் பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பயிற்சி அளிப்பவர் என்றும் அவரிடம் பிலிப்பீன்ஸ், இலங்கை என இருநாட்டு கடவுச்சசீட்டும் இருப்பதாக தீவிரவாதி எதிர்ப்பு அமைப்பின் அரசு அதிகாரி ஒருவர் கூறினர்.
கடந்த ஜனவரி மாதம் சுலு மாகாண தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் சோபியாவிற்கும் தொடர்பு உள்ளது என்றார் அவர்.
கடந்த 2018 நவம்பரில், சோபியா பிலிப்பீன்சில் நுழைந்ததாகவும் சம்ஹுன் கடந்த ஜூன் மாதம் வந்திருக்கலாம் எனவும் அவர்கள் கூறினர்.

