மலேசிய மாநிலங்களில் டெங்கி பாதிப்பு அதிகரிப்பு

மலேசிய மாநிலங்களில் டெங்கி பாதிப்பு அதிகரிப்பு

2 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் டெங்கிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக மலேசிய சுகாதார துணை அமைச்சர் லீ பூன் சை தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர், ஜோகூர், கிளந்தான், சாபா, பினாங்கு, சரவாக், பாகாங், நெகிரி செம்பிலான் உட்பட 9 மாநிலங்களில் டெங்கிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்திருப்பதாக டாக்டர் லீ கூறினார்.

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகள், அடுக்குமாடி வீடுகள் உட்பட 251 இடங்களில் இக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கும் ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட 80,000 பேர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இந்தக் காலக் கட்டத்தில் டெங்கிக் காய்ச்சல் பாதிப்பால் 113 பேர் மரணம் அடைந்ததாக புள்ளிவிவரத் தகவல்கள் கூறுகின்றன.

டெங்கிக் காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 150,000 ஐ எட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப் படுவதாக டாக்டர் லீ பூன் சை கூறினார். மலேசியாவில் டெங்கிக் காய்ச்சல் பாதிப்பு 2015ஆம் ஆண்டில் மிகவும் அதிகமாக இருந்தது. அந்த ஆண்டில் 120,836 பேர் அக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அந்த ஆண்டு மட்டும் டெங்கிக் காய்ச்சல் பாதிப்பால் 336 பேர் மரணம் அடைந்தனர்.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கும் ஆகஸ்ட் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டுடன் ஒப்புநோக்க இரண்டு மடங்காகும். சென்ற ஆண்டு இதே காலக்கட்டத்தில் 42,496 பேர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இக்காய்ச்சல் பாதிப்பால் 70 பேர் மரணம் அடைந்தனர்.

டெங்கிக் காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் டாக்டர் லீ கூறினார்.

டெங்கிக் காய்ச்சல் பரவுவதற்குக் காரணமான கொசுக்களை ஒழிப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார். வெப்பமான பருவநிலையும் குப்பை போடுவதும் அக்காய்ச்சல் பரவுவதற்கு மற்றும் ஒரு காரணமாகும்.

டெங்கிக் காய்ச்சல் பரவுவதற்கு முக்கிய காரணமான ஏடிஸ் கொசுக்கள் பெருகாமல் இருக்க குடியிருப்பாளர்கள் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என்றும் டாக்டர் லீ கேட்டுக்கொண்டார். சீனா, தைவான் போன்ற இடங்களிலும் இக்காய்ச்சல் பாதிப்பு உள்ளது.