வடகொரியா நேற்று மேலும் இரு ஏவுகணைகளைப் பாய்ச்சி சோதனை செய்தது. அண்மைய வாரங்களில் அந்நாடு மேற்கொண்ட ஐந்தாவது ஏவுகணைச் சோதனை இது. இவை கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய குறுந்தொலைவு ஏவுகணைகளாக இருக்கக்கூடும் என்று தென்கொரிய ராணுவம் தெரிவித்தது. மேலும் இச்சோதனை ஐநா பாதுகாப்பு மன்றத்தின் 11 தீர்மானங்களுக்கு எதிரானது என்றும் சோல் கூறியது.
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னிடம் இருந்து மிக அழகான கடிதம் கிடைக்கப்பெற்றதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்த பின்னர் இந்த ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டுள்ளன. அமெரிக்காவும் தென்கொரியாவும் கூட்டாக மேற்கொண்டு வரும் ராணுவப் பயிற்சி குறித்து கிம் அதிருப்தி தெரிவித்திருப்பதாக டிரம்ப் கூறியிருந்தார்.
வடகொரியாவின் தெற்கு ஹாம்யோங் மாகாணத்தில் உள்ள ஹாம்ஹங் நகருக்கு அருகில் இருந்து ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டதாகவும் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 5.34 மணிக்கும் 5.50 மணிக்கும் அவை அடுத்தடுத்து ஏவப்பட்டதாகவும் தகவல்கள் கூறின.
அவை கிட்டத்தட்ட 400 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்று கடலில் விழுந்ததாகவும் மணிக்கு 7,500 கிலோ மீட்டர் என்னும் வேகத்தில் அவை பறந்து சென்றதாகவும் தென்கொரிய ராணுவ அறிக்கை தெரிவித்தது.
அமெரிக்க-தென்கொரிய ராணுவப் பயிற்சிகளுக்கு எதிராக தமது பலத்தைக் காட்டும் வகையில் வடகொரிய நடவடிக்கை அமைந்திருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.

