கடுமையான இடியும் அதனைத் தொடர்ந்து வீசிய பலத்த புயல் காற்றும் பினாங்கு உள்ளிட்ட மலேசிய மாநிலங்களைப் பாதித்துள்ளன. கிழக்கு சீனாவின் லெக்கிமா சூறாவளியின் தாக்கத்தால் மலேசியாவை புயல் தாக்கியதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்தது.
பினாங்கு மாநிலத்தில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுவதையும் மரக்கிளைகள் ஒடிந்து விழுவதையும் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் காணப்பட்டன. பலத்த காற்றில் பெயர்ப்பலகைகள் பல பறந்து செல்லும் படங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டன.
கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் புயல் காற்று அசுர வேகத்தில் வீசி ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. மரங்களும் பொருட்களும் விழுந்ததால் அவற்றில் சிக்கி ஐவர் காயமுற்றதாகவும் அவர்கள் செபராங் ஜெயா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் பினாங்கு மாநில நல்வாழ்வு மற்றும் பராமரிப்புச் சங்கம் கூறியது.
காயம் அடைந்தோரில் இருவர் மோட்டார் சைக்கிளோட்டிகள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். உல்லாச தீவான லங்காவி அமைந்துள்ள கெடாவிலும் பெர்லிஸிலும் உள்ள பல பகுதிகளையும் நேற்று முன்தினம் புயல் தாக்கியது.
கோத்தா செட்டார், குபாங் பாசு, லங்காவி, பெந்தோங் உள்ளிட்ட எட்டு வட்டாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
மேலும், புயல் காற்று சேதப்படுத்திய போகோர், உலு மலாக்கா, கெடாவாங், ஆயர் ஹாங்காட், பாடாங் மட்சிராட் உள்ளிட்ட பகுதிகளைக் காட்டிலும் லங்காவித் தீவு கடுமையான பாதிப்புக்கு உள்ளானது.
இரவு 8 மணியளவில் வீசிய புயல் காற்றால் எராளமான வீடுகளும் வாகனங்களும் சேதமுற்றதாக லங்காவி வட்டார பேரிடர் நிர்வாகக் குழுச் செயலாளர் அகமது ஷாஃபிக்ரி டாருஸ் கூறினார். ஏழு கிராமங்களைச் சேர்ந்த 11 வீடுகளின் கூரை காற்றால் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
உயிருடற் சேதம் குறித்த தகவல் இல்லை என்று கூறிய அவர், இருப்பினும் முழு விவரங்கள் இன்னும் வரவில்லை என்று குறிப்பிட்டார்.

