மியன்மாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்நாட்டின் ராணுவப் படையினர் நிவாரணப் பணிகளில் உதவி வருகின்றனர். கனமழையால் அந்நாட்டின் கிழக்குப்பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்ட மோசமான நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்ததை அடுத்து மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வோர் ஆண்டிலும் பெய்யும் பருவமழையால் மியன்மாரும் தென்கிழக்காசியாவிலுள்ள பல நாடுகளும் பாதிப்படைகின்றன. மட்டுமீறிப் பெய்யும் இந்த மழையால் வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை ஒவ்வொரு முறையும் ஏற்படுகின்றன. அப்போதெல்லாம் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறும் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.
இருப்பினும், மோன் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நேர்ந்த நிலச்சரிவு அண்மைய ஆண்டுகளில் வழக்கத்தைவிட மிக மோசமானதாக உள்ளது. நேற்றுக் காலை நிலவரத்தின்படி, நிலச்சரிவில் புதையுண்டு மாண்டவர்களின் சடலங்களை நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் சகதியிலிருந்து தோண்டியெடுத்து வருகின்றனர்.
"மாண்டோரின் எண்ணிக்கை மொத்தம் 48 ஆக உள்ளது. தேடல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன," என்று பவுங் நகராட்சி செயலாளர் ஸாவ் மோ அவுங், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
மழைப்பொழிவு மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் மியன்மாரின் ராணுவப் படையினர் மீட்புப் பணிகளுக்குக் கைகொடுத்து வருகின்றனர். " பேரிடருக்குள்ளான இடங்களில் தேடல் மற்றும் மீட்புப் பணிகளில் உதவ எங்கள் வட்டார ராணுவ தளபத்தியங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. அத்துடன் உணவு விநோகத்திற்காக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன," என்று அந்நாட்டின் பிரிகேடியர் ஜெனரல் சாவ் மின் துன் தெரிவித்தார்.
வெள்ளத்தில் இதுவரையில் 4,000 வீடுகள் மூழ்கடிக்கப்பட்டதுடன் 25,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி மடாலயங்களில் தஞ்சம் புகுந்துள்ளதாக மியன்மார் ஊடகங்கள் கூறுகின்றன.

