ஜோகூர்: ஜோகூரின் மன்னரான சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் தமது மகனும் பட்டத்து இளவரசருமான துங்கு இஸ்மாயிலை அம்மாநிலத்தின் ஆட்சியாளராக நியமித்துள்ளார்.
ஜோகூர் பாருவிலுள்ள பாசிர் பெலாங்கி அரண்மனையில் இளவரசர் இஸ்மாயில் மாநில ஆட்சியாளராக நியமிக்கப்பட்டதாகக் கூறும் அறிக்கை நேற்று ஜோகூர் சுல்தானின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது.
சுல்தானின் கடமைகள், ஜோகூர் மாநில நிர்வாகம் உள்ளிட்ட அந்தப் பதவிக்கான அனைத்து அதிகாரங்களும் புதிய ஆட்சியாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த முடிவுக்கான காரணத்தை அந்த அறிக்கை குறிப்பிடவில்லை. ஆயினும், ஜோகூரின் பட்டத்து இளவரசருக்கு ஆட்சியாளர் பொறுப்பு கொடுக்கப்படுவது இது முதல் முறையல்ல.
2016ஆம் ஆண்டில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஜோகூர் சுல்தான் மாநிலத்தில் இல்லாதபோது இளவரசர் இஸ்மாயில் அந்தப் பொறுப்பை வகித்திருந்தார்.
நேற்றுக் காலை சுல்தான் இப்ராஹிம் 2,000 முஸ்லிம்களுடன் 'பாசிர் பெலாங்கி' பள்ளிவாசலில் நடைபெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டார்.
அப்போது இஸ்மாயில், சுல்தானின் மருமகன் டென்னிஸ் முகம்மது அப்துல்லா ஆகியோர் சுல்தான் இப்ராஹிமுடன் இருந்தனர்.

