சோல்: தாங்கள் அண்மையில் நடத்திய சோதனை புதிய தயார்நிலைக்கானது என்று கூறியுள்ளது வடகொரியா.
சனிக்கிழமை சோதனை நடந்ததாக தகவல் வெளியான பிறகு, இத்தகவலை வடகொரிய உள்ளூர் ஊடகமான கேசிஎன்ஏ நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.
தென்கொரியா, அமெரிக்க ராணுவத்தின் கூட்டுப் பயிற்சி முடிவு பெறும் நிலையில், தான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளதாக கிம் தன்னிடம் கூறியதாகவும் ஏவுகணை சோதனைகளுக்கு மன்னிப்பு தெரிவித்ததாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து, கேசிஎன்ஏ இத்தகவலை வெளியிட்டுள்ளது.
தென்கொரியா கூட்டுப் பயிற்சியை நிறுத்த மறுத்துவிட்டதால், இனி அவர்களோடு எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படாது என்றும் வடகொரியாவின் வெளியுறவு அமைச்சு கூறியதாக அச்செய்தி கூறுகிறது.
அமெரிக்காவோடு நடத்தப்படும் பேச்சுவார்த்தை முற்றிலும் வடகொரியா தொடர்புடையதாக மட்டுமே இருக்கும் என்றும் அது கூறுகிறது. இதற்கிடையே கூட்டுப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா இச்சோதனையில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

