மாஸ்கோ: ரஷ்யாவில் மூன்றாவது வாரயிறுதி நாளாக நேற்று முன்தினம் நடந்த போராட்டம், கடந்த 8 ஆண்டுகளில் முதன்முறை என்கிறது கண்காணிப்பாளர்் குழு ஒன்று.
நியாயமான தேர்தலை நடத்தக்கோரி, ஒரு மாதத்தில் ஐந்தாவது ஆர்ப்பாட்டமாக நேற்று முன்தினம் இடம்பெற்ற போராட்டத்தில் சுமார் 60,000 பேர் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 20,000 பேர் என்று போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
அடுத்த மாதம் இடம்பெறும் உள்ளூர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டங்களுக்கு அதிகாரபூர்வமாக அங்கீகாரம் வழங்கப்பட்டபோதும் அதிபர் விளாடிமிர் புட்டினின் அலுவலகங்களுக்கு வெளியே நடந்த போராட்டத்தின்போது பலரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
போராட்டங்களின் போது போலிசாரின் அடக்குமுறை அதிகரித்துள்ளதன் காரணமாக தற்போது போராட்டம் பலமடைந்து வருகின்றது.
இருப்பினும் மாஸ்கோ உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் அமைதியின்மை குறித்து அதிபர் புட்டினும் கிரெம்ளினும் இதுவரை கருத்து தெரிவிப்பதைத் தவிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

