கோலாலம்பூர்: மலேசியாவில் கொள்ளையர்கள் நேற்று மூன்று ஏடிஎம் இயந்திரங்களை வெடிவைத்து தகர்த்து ஓர் இயந்திரத்திலிருந்து 300,000 ரிங்கிட் பணத்தை களவாடிச்சென்றதாக போலிசார் கூறினர்.
தஞ்சோங் மாலிம், ஜாலான் ஹாஜி முஸ்தபா ராஜா கமலா பகுதியில் உள்ள ஒரு வங்கியின் மூன்று ஏடிஎம் இயந்திரங்களைக் கொள்ளையர்கள் நேற்று வெடிவைத்து தகர்த்ததாக போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அந்த கொள்ளைச் சம்பவம் நேற்று அதிகாலை 6.30 மணிக்கு நடந்ததாக தஞ்சோங் மாலிம் போலிஸ் படைத் தலைவர் வான் கமருல் அஸ்ரான் வான் யூசுப் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை மாலைதான் அந்த இயந்திரத்தில் 300,000 ரிங்கிட் பணத்தை அந்த வங்கி நிரப்பி வைத்ததாக தொடக்கக்கட்ட புலன் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது என்று அவர் சொன்னார்.
கொள்ளையர்கள் வெடிவைத்துத் தகர்த்ததில் மற்ற இரு ஏடிஎம் இயந்திரங்கள் சேதம் அடைந்ததாகவும் அந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் கண்ணாடிக் கதவு உடைந்து நாலாபக்கமும் சிதறிக் கிடந்ததாகவும் போலிசார் கூறினர். அந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் உள்ள ஒரு கார்ப்பேட்டையில் ரசாயனத் தடயங்கள் காணப்பட்டதாகவும் ஏடிஎம் இயந்திரங்களைத் தகர்க்க கொள்ளையர்கள் அத்தகைய ரசாயனத்தை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று நம்பப்படுவதாகவும் போலிஸ் படைத் தலைவர் வான் கமருல் கூறினார்.
ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணத்தை அபகரித்துச் சென்ற கொள்ளைக்காரர்களை போலிசார் தேடி வருகின்றனர். இயந்திரங்களை வெடிவைத்து தகர்த்தபோது கொள்ளையர்களில் சிலர் காயம் அடைந்திருக்கக்கூடும் என்று போலிசார் கருதுகின்றனர்.

