கண்ணில் சுடப்பட்ட பெண்; கோபத்தில் கொந்தளிக்கும் ஹாங்காங்

ஹாங்காங்கில் ஜனநாயக உரிமைகளுக்கான ஆர்ப்பாட்டம் இரண்டாவது மாதமாகத் தொடர்கிற இந்நேரத்தில், போலிசாரால் வலது கண்ணில் சுடப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குரல் கொடுத்துவருகின்றனர். வெகு காலமாக அகிம்சையைக் கடைப்பிடித்து தங்களது உரிமைகளைக் கோரிவரும் அந்த மக்களின் பொறுமைக்கு  இந்த அண்மை நிகழ்வு மற்றொரு சோதனையாக உள்ளது.  

காய்ந்த பட்டாணிகளைக் கொண்டுள்ள சிறு பைக்குண்டால் அடையாளம் வெளியிடப்படாத அந்தப் பெண்ணை போலிசார், கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘சிம் ஷா சுய்’ தெருவில் சுட்டதாகத் தெரிவித்தனர். அவர் மருத்துவத் துறையில் பணியாற்றுவதாகச் சில செய்தி அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

 

சாலையோர நடைபாதையில் படுத்துக் கிடந்திருந்த அந்தப் பெண்ணின் முகத்தில் ரத்தம் நிரம்பி வழிவதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.இதனால் அந்தப் பெண் தனது கண்பார்வையை இழந்ததாக வதந்திகள் பரவின. சம்பவத்திற்குத் தாங்கள் பொறுப்பல்ல என்று போலிஸ் கூறியது அங்குள்ள மக்களை மேலும் கோபப்படுத்தியுள்ளது.  ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் தற்போது தங்களது வலது கண்ணைக் கட்டுகளால் மூடிக்கொண்டு தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, ஆர்ப்பாட்டங்களைக் கண்டித்த ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம், இத்தகைய  ‘சட்டவிரோதச் செயல்கள்’ சட்டத்தின் மாட்சிமையைச் சீர்குலைப்பதாகவும் இதனால் ஏற்பட்டுள்ள பொருளியல் இழப்பை மீண்டும் பெற வெகு காலம் ஆகலாம் என்றும் தெரிவித்தார்.

“வன்முறைச் செயல்களும் அதற்கான ஆதரவும் ஹாங்காங்கைத் திரும்ப முடியாத பாதையில் இட்டுச் சென்றுவிடும். இதனால் ஹாங்காங் பேராபத்திற்குரிய, கவலைக்குரிய சூழ்நிலைக்கு உள்ளாகலாம்,” என்று இன்று அவர் செய்தியாளர் கூட்டத்திடம் தெரிவித்தார்.