கோலாலம்பூர்: சிரம்பானில் காணாமற்போன 15 வயது பிரிட்டிஷ் சிறுமியைத் தேடி வரும் மீட்புக் குழுவினர் ஒரு மலைப் பகுதிக்கு அருகே ஒரு பெண்ணின் சடலத்தை கண்டுபிடித்திருப்பதை மலேசியப் போலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர். இறந்த பெண்ணின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என்ற போதிலும் அந்த சடலம் காணாமற்போன பிரிட்டிஷ் சிறுமியின் சடலமாக இருக்கலாம் என்று நம்பப்படுவதாக போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்நிலையில் அந்த சடலம் தங்கள் மகளுடையதுதான் என்பதை அச்சிறுமியின் பெற்றோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சிரம்பானில் உள்ள டூசுன் உல்லாச விடுதிக்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைப்பகுதியில் எஞ்சிய மனித உடல்் பாகங்களை மீட்புக் குழுவினர் நேற்று கண்டுபிடித்தனர். அந்த இடத்தில் தடயவியல் ஆய்வாளர்கள் சோதனை செய்து வருவதாகவும் இறந்த பெண் யார் என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை என்றும் மாநில போலிஸ் படைத் தலைவர் முகம்மது மாட் யூசுப் முன்னதாகக் கூறினார்.
அந்தப் பெண் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த பெண் என்பதை மலேசியப் போலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நேற்று மதியம் 1 மணியளவில் பொதுமக்களிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து அப்பகுதிக்கு மீட்புக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டதாக முகம்மது மாட் கூறினார். சிரம்பானில் உள்ள டூசுன் விடுதியில் தன் பெற்றோருடன் தங்கியிருந்த நோரா அன் குய்ரின் என்ற சிறுமியை கடந்த 10 நாட்களாகக் காணவில்லை. அச்சிறுமியை மீட்புக் குழுவினர் தேடி வந்தனர்.

