சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மத்திய பகுதியில் ஒரு பெண்ணைக் கத்தியால் குத்திய ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் மற்றவர்களையும் கத்தியால் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இறுதியில் பொதுமக்களில் சிலர் அவரை மடக்கிப் பிடித்து ஒருவழியாகக் கட்டுப்படுத்தினர்.
ஆஸ்திரேலியாவின் ஆகப் பெரிய நகரமான சிட்னியின் மத்திய வர்த்தக வட்டாரத்தில் ஏற்பட்ட இந்தத் தாக்குதலால் அங்கு பதற்றம் நிலவுகிறது. பொதுமக்களின் நடமாட்டமும் சாலைப் போக்குவரத்தும் வெகுவாகக் குறைந்துள்ளன. தற்போது மருத்துவ சிகிச்சை மேற்கொண்டுவரும் அந்தப் பெண்ணின் காயங்கள் ஆபத்தானவை அல்ல என்று ஆஸ்திரேலியப் போலிசார் தெரிவித்தனர். அந்த சம்பவம் நடப்பதற்கு சற்று முன்னர் சந்தேக நபர் சிறிது தூரம் ஓடி ஒரு கார் ஒன்றின் மீது ஏறித் தனது கத்தியை அசைத்துக்கொண்டிருந்ததைச் சமூக ஊடகங்களில் வெளிவந்த ஒரு காணொளி காட்டுகிறது.

