தோக்கியோ நகரத்தின் 2020 'ஒலிம்பிக்ஸ்' கட்டுமான இடத்தில் வேலை செய்த பணியாளர் ஒருவர் திடீரென விழுந்து இறந்தார். இதற்கு ஜப்பானின் தலை நகரில் வீசும் கடுமையான அனற்காற்றே காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்ற வியாழக்கிழமையன்று அந்த 50 வயது ஆடவர் கொளுத்தும் வெயிலில் சுயநினைவு இல்லாமல் தரையில் கிடந்ததாகத் தெரிய வந்துள்ளது.
மின்சாரக் கம்பிவடங்களைப் பொருத்திக் கொண்டிருந்த இடத்தில் விழுந்து கிடந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் உயிரிழந்தது அங்கு உறுதி செய்யப்பட்டதாக தோக்கியோ 2020 'ஒலிம்பிக்ஸ்'-இன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அந்த ஆடவர் உயிரிழந்ததன் உண்மையான காரணம் என்னவென்று அதிகாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் அங்குள்ள அனற்காற்றின் காரணமாகத் தான் அவர் மரணம் அடைந்திருக்கவேண்டும் என்று போலிசார் சந்தேகிப்பதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன என ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
இதுவரை அந்தக் கட்டுமானத் தளத்தில் மூன்று மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஏற்கனவே பணியின் காரணமாக அதிக மனவுளைச்சலுக்கு ஆளான பணியாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து இன்னொருவர் ஒரு விபத்தில் இறந்துவிட்டார். மேலும் தோக்கியோவின் கடுமையான அனற்காற்றும் கொளுத்தும் வெயிலும் குறித்து 'ஒலிம்பிக்ஸ்' ஏற்பாட்டாளர்கள் கவலையுற்றிருக்கின்றனர்.
இவ்வாண்டின் நீண்ட மழை காலத்திற்குப் பின் ஜப்பானின் தலைநகரில் மீண்டும் அபாயகரமான அனற்காற்று ஓங்கியுள்ளது. சுட்டெரிக்கும் கடுமையான வெயில் தாக்குதலால் இம்மாதத் தொடக்கத்தில் 18,000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதுடன் 57 பேர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் வெயிலின் உச்சத்திலிருந்து பணியாளர்களைக் காக்க ஏற்பாட்டாளர்கள் சில குளிரூட்டும் முறைகளைக் கையாண்டுள்ளனர். அதற்கு 'மிஸ்டிங் ஸ்ரேக்கள்' எனும் மின்துளி ஊதிகளுடன் பணியாளர்கள் நல்ல மனநிலையில் வேலைச் செய்வதற்கு கட்டுமான இடத்தின் வேலியைச் சுற்றி தாவரச் செடிகளும் வைக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

