பக்தர்களைப் புண்படுத்தும் விதமாகப் புனித நீரைப் பயன்படுத்தியதற்கு இரு சுற்றுப்பயணிகள் மன்னிப்பு கேட்டனர்.
செக் குடியரசைச் சேர்ந்த சபினா டொலெஸாலொவா எனும் உடற்கட்டு கலைஞர் சமீபத்தில் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்த ஒரு காணொளியினால் வந்த விளைவு இது.
அந்தக் காணொளியில் டொலெஸாலொவாவுடன் மற்றோர் ஆடவரும் சமய வழிபாட்டு இடங்களில் ஒருவரை ஒருவர் அணைத்து சிரித்துக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
அதன் பிறகு, டொலெஸாலொவா அவருடைய குட்டை பாவாடையை மேலே தூக்க, சமய வழிபாட்டு இடம் ஒன்றில் இருந்த புனித நீரை பயன்படுத்தி அந்த ஆடவர் டொலெஸாலொவாவின் பின்புறத்தில் தெளித்துள்ளார்.
பாலியில் உள்ள ஊபட் நகரத்தின் 'மங்கீ ஃபோரஸ்ட்' எனும் கோவிலில் இந்தக் காணொளி எடுக்கப்பட்டிருந்ததாக detik.com எனும் செய்தித் தளம் குறிப்பிட்டது.
700க்கும் மேலான குரங்குகளும் மூன்று கோவில்களும் உள்ள இந்தக் காடு பாலியின் உள்ளூர் மக்களால் ஒரு தெய்வீகத் தலமாகக் கருதப்படுகிறது.

