ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டு விமான நிலையம் இரண்டு நாட்களாக மூடப்பட்டது.
இன்று அதிகாலை விமான நிலையத்தில் இருந்து போராட்டக்காரர்களில் பெரும்பாலானோர் வெளியேறினர். இதையடுத்து, ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து விமானச் சேவைகள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கின.
நள்ளிரவில் இருந்து 12-க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்பட்டுச் சென்றதாக விமான நிலையத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து புறப்பட இருக்கும் விமானங்களின் அட்டவணைப்பட்டியலும் வெளியிடப்பட்டு இருந்தது.
விமான நிலையத்தில் சில போராட்டக்காரர்கள் மட்டுமே இருப்பதாக அறியப்படுகிறது. விமான நிலையத்தின் பதிவு செய்யும் பகுதி வழக்கம் போல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய கைதிகள் பரிமாற்றச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. 10-வது வாரத்தை எட்டியுள்ள இந்தப் போராட்டத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர வன்முறை வெடித்தது.

