சீனப் பொருட்களுக்கு வரி விதிப்பதில் தாமதம்

வாஷிங்டன்: சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கைத்தொலைபேசி,  மடிக்கணினி  போன்ற சில பொருட்களுக்கு வரி விதிப்பதை அமெரிக்க அதிபர்  டோனல்ட் டிரம்ப் பின்னொரு தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

கிறிஸ்மஸ் விழாக்காலம் நெருங்குவதால் கடைகளில் பொருட்கள் வாங்குவோர் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்கவே வரி விதிப்பதை தாமதப்படுத்தியிருப்பதாக திரு டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். 

திரு டிரம்ப்பின் இந்த அறிவிப்பு வெளிவருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்க பிரதிநிதிகள் அலுவலகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது.  

சீனாவில் தயாரிக்கப்பட்ட கைத்தொலைபேசி,  மடிக்கணினிகள், பொம்மைகள் போன்ற விளையாட்டுப் பொருட்கள்,  காலணிகள் மற்றும் துணிகள் போன்ற பிரபல கிறிஸ்மஸ் பரிசுப் பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கவுள்ள 10 விழுக்காடு கூடுதல் வரி டிசம்பர் 15ஆம் தேதிக்கு  தள்ளிவைக்கப்படுவதாக அந்த அலுவலகம் தெரிவித்தது.

எந்தெந்த பொருட்களுக்கு வரி விதிப்பு தள்ளிவைக்கப்படுகிறது என்பதை விவரிக்கும் 21 பக்க பட்டியலை அந்த அலுவலகம் வெளியிட்டது.

சீனப்பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பதால் தங்கள் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் இந்த பாதிப்பிலிருந்து மீள நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்யக்கூடும் அல்லது பொருட்களின் விலையை உயர்த்தக்கூடும் என்று நிறுவன நிர்வாகிகள் கடந்த ஜூன் மாதம் கூறியிருந்தனர். அமெரிக்காவின் வரி விதிப்பால்  தங்கள் நிறுவனங்களை மூடக்கூடிய சூழல் ஏற்படலாம் என்றும் நிர்வாகிகள் சிலர் கூறியிருந்தனர். 

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும்  இதர  பொருட்களுக்கு தேசிய பாதுகாப்பு மற்றும் இதர காரணங்களுக்காக  வரி விலக்கு அளிக்கப்படுவதாக அமெரிக்க பிரதிநிதிகள் அலுவலகம் தெரிவித்தது.

சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பதை அமெரிக்கா தள்ளிவைத்திருப்பது  வியாபாரிகளுக்கு மகிழ்்ச்சியைக் கொடுத்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறினர். அத்துடன் அமெரிக்கா மற்றும்  சீனாவின் வர்த்தகப் பிரதிநிதிகள் வர்த்தகப் பேச்சை தொடரவும் இது வழிவிட்டுள்ளது என்பது ஆய்வாளர்களின் கருத்து.

வரி விதிப்பதை திரு டிரம்ப் தள்ளிவைத்திருப்பதை வரவேற்பதாகக் கூறிய தேசிய சில்லறை வியாபாரிகள் சம்மேளனத்தின் தலைவர் டேவிட் பிரெஞ்ச், அமெரிக்க வர்த்தகத்  தொழிலில் நிச்சயமன்ற தன்மை தொடர்ந்து நிலவுவதை சுட்டிக் காட்டினார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நீடிக்கும் வர்த்தகப் பூசலுக்கு தீர்வு காண அவ்விரு நாடுகளின் பிரதிநிதிகள் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர்.

வர்த்தக உடன்பாடு காண்பதில் அவ்விரு நாடுகளுக்கும் இடையில்    சில கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. பெரும்பாலும்  அடுத்த ஆண்டு அமெரிக்கத் தேர்தலுக்குப் பின்னரே வர்த்தக உடன்பாடு காண சீனா விரும்புவதாகத் தெரிகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனத்தின் தலைவரான இவர் தொழில் நிமித்தமாக இந்தியாவுக்குச் சென்றுள்ளார். படம்: இணையம்

13 Dec 2019

இங்கிலாந்து தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன்: எனது மரபணு தமிழகத்துடன் தொடர்புடையது

உறைகளை பிரித்து பார்த்த ஊழியர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த உறைகளில் கிறிஸ்துமஸ் போனஸ் தொகை கொடுக்கப்பட்டிருந்தது. படம்: ஊடகம்

13 Dec 2019

ஊழியர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் போனஸ் அளித்த நிறுவனம்

பிரிட்டிஷ் பொதுத் தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. படம்: ஏஎஃப்பி

13 Dec 2019

போரிஸ் ஜான்சன் கட்சி வெற்றி